டில்லி

ரி செலுத்துவோரிடம் வருமானவரித்துறை பெயரால் மாபெரும் மோசடி நடைபெறுவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

உலகெங்கும் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகரித்து வருகிறது.   இது அனைவருக்கும் வசதியாக உள்ளது என்றாலும்  மோசக்காரர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது.    இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் காலத்துக்கு ஏற்ப தங்கள் முறைகளை மாற்றி வருகின்றனர்.  தற்போது வருமான வரித்துறை என்னும் பொய்ப் பெயரில் வரி செலுத்துவோரைக் குறி வைத்து இந்த மோசடி நடைபெற்று வருகிறது.

வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை என்னும் பெயரில் இ மெயில் மற்றும் குறும் தகவல் மூலம் வரி கணக்கை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டுகோள் விடப்படுகிறது.    இந்த தகவல்களின் இறுதியில் ஒரு இணைய முகவரி அளிக்கப்பட்டு அதன் உள்ளே செல்லுமாறு அறிவிக்கப்பட்டிருக்கும்.  குறிப்பாக வருமான வரியைத் திரும்பப் பெற இந்த இணையத்தில் செல்ல கேட்டுக் கொள்ளப்படும்.

அந்த இணையத்துக்குள் செல்லும் போது அங்கு உள்ள ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டி இருக்கும்.   அந்த விண்ணப்பத்தில், உங்கள் வங்கிக் கணக்கு விவரம், ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட அனைத்தும் கேட்கப்பட்டிருக்கும்.    உண்மையில் வருமான வரித்துறைக்கு இந்த தகவல்கள் தேவையே இல்லை என்பதைப் பலர் அறிய மாட்டார்கள்.     இந்த தகவல்கள் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து மோசடிப் பேர்வழிகள் முழுப் பணத்தையும் எடுத்து விட வாய்ப்பு உண்டு.

அது மட்டுமின்றி இந்த விவரங்கள் வேறு சில மோசடி ஆட்களுக்கு விற்கப்படும்.   அதன் பிறகு அவள் ஒரு தொடர்கதை என்பது போல் ஏமாறுவது நமது தொடர்கதை ஆகி விடும்.    இது குறித்து பலர் வருமான வரித்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.  இந்த மோசடிகளுக்கும் வருமான வரித்துறைக்கும் தொடர்பு இல்லை என வருமான வரித்துறை தெளிவு படுத்தி உள்ளது.  அத்துடன் இது போல வரும் குறும் செய்தி மற்றும் இ மெயிலை திறக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை அளித்துள்ளது.

இந்த மோசடிகளில் இருந்து தப்பிக்க நாம் செய்ய வேண்டியவை :

1.       இது போல இ மெயில் மற்றும் குறும் செய்தி நம்முடைய விவரங்களைத் தெரிந்துக் கொள்ள விரிக்கப்ப்டும் வலை என்பதை உணர வேண்டும்.

2.       வருமானவரித்துறை இந்த விவரங்களை ஒரு நாளும் கேட்காது என்பதால் இதை உணர்ந்து கவனமுடன் செயல்பட வேண்டும்.

3.       உங்களுக்கு இது குறித்து ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் இது குறித்து  வங்கி அதிகாரிகளுக்கும், வருமான வரி அதிகாரிகளுக்கும் புகார் அளிக்க வேண்டும்.

4.       எந்த ஒரு காரணத்துக்காகவும் நீங்கள் வருமான வரிப் பணம் திருப்பி அனுப்ப உள்ளதாக வரும் தகவலை நம்பி வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைத் தரக்கூடாது.