ஒரு மாத அளவிலான மருந்துகள் வழங்கி வீட்டிலேயே இருக்கச் செய்த காரணமா அல்லது கொடுக்கப்பட்ட காசநோய் மருந்துகள் கொரோனாவை எதிர்த்து வேலை செய்கிறதா என்று இன்னும் அறியப்படவில்லை. ஆனாலும், ஒரு முக்கிய தகவலாக, பெரும்பாலான காசநோய் கொண்டவர்கள், எவ்வித கொரோனா பாதிப்புக்கும் ஆளாகவில்லை. இதை கவனித்து வந்த மருத்துவர்கள் ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளனர். பல்வேறு நகரங்களில் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மிக விரைவாக தொடர்ந்து அதிகரித்து வரும் இந்நிலையில், ஆச்சர்யமான நிகழ்வாக, மருத்துவர்கள் கவனித்து வந்த ஒரு போக்கு அனைவரையும் குழப்பத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகவே குறைவான நோயெதிர்ப்பு கொண்ட காசநோய் நோயாளிகள் அதிக அளவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகலாம் என மருத்துவர்கள் எதிர்பார்த்திருக்க, ஆச்சரியப்படும் விதமாக இதுவரை இரண்டு நோயாளிகள் மட்டுமே சுகாதாரத் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சேவிரியில் உள்ள காசநோய் மருத்துவமனையின் அதிகாரிகள்,  ஊழியர்களில் 14 பேர் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளாக இருந்தாலும், அவர்களில் ஒரு காசநோய் நோயாளி கூட இல்லை.

குடிமை சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இது குறித்த ஒரு இறுதி முடிவை எடுக்க இயலாத வகையில் இது இன்னும் ஆரம்பகட்டத்திலேயே உள்ளது. ஆனால் காசநோய் மருந்து மற்றும் குறைவான எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் என இரண்டுக்கும் உள்ள தொடர்புக் குறித்து இன்னும் நிறைய ஆராய வேண்டியுள்ளது” என்றார்.  “இதுவரை, கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு இரண்டு காசநோய் நோயாளிகளின் பதிவு எங்களிடம் உள்ளது. இருப்பினும், இறப்புகள் எதுவும் இல்லை. ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு, வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தியதும் கூட கொரோனா நோயாளிகளின் குறைவான எண்ணிக்கைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்,” என்று அந்த அதிகாரி கூறினார். தற்போதைய இந்த போக்கு காசநோய் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் லலித்குமார் ஆனந்தேவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் காசநோய் எதிர்ப்பு மருந்துகள் கொரோனா தொற்றைத் தடுக்கக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. “காசநோய் நோயாளிகளுக்கு பொதுவாகவே நோயெதிர்ப்பு மற்றும் நுரையீரல் குறைபாடு இருக்கும் என்பதால், கொரோனா தொற்று அவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கணித்திருந்தோம். ஆனால், வியப்பூட்டும் விதமாக, இங்கே காசநோய் மருத்துவமனையில், இதுபோன்ற எந்தவொரு நிகழ்வையும் நாங்கள் இதுவரை காணவில்லை,” என்று அவர் வியப்பு தெரிவித்தார்.

டாக்டர் ஆனந்தே மேலும் கூறுகையில், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் போன்ற ஆய்வகங்களில் காசநோய் மற்றும் கொரோனா வைரஸின் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் இருப்பதால் இது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு மிக விரிவாக சோதனைகளை நடத்த முடியும். “காசநோய் எதிர்ப்பு மருந்துகள்,  கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துகளான ஹைட்ராக்ஸி-குளோரோ–குயினோன் போன்றதொரு செயல்பாட்டுத்தன்மை கொண்டதாக இருக்கலாம் என யூகிக்கிறோம். ஏனெனில், வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைப் போன்றே, காசநோய் எதிர்ப்பு மருந்துகளும், காசநோய் பேக்டீரியாவின் செல் சுவர் மற்றும் செல் சவ்வின் லிப்பிட் படலத்தின் வழியே செல்லுக்குள் ஊடுருவுகின்றன. காசநோய் எதிர்ப்பு மருந்துகள் கொரோனா வைரஸுக்கு ஒரு தீர்வாக இருக்கலாம். அதைப் பற்றிய ஆய்வுகள் மேலும் புரிந்துகொள்ள உதவும்” என்று அவர் கூறினார். மைக்கோபாக்டீரியம் மற்றும் காசநோய் மருந்துகள் வைரஸில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை ஆராய்ச்சியால் கண்டறிய முடியும். COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு காசநோய் நோயாளிகளை சியோன் மருத்துவமனை அறிவித்துள்ளது. ஆனால், KEM மற்றும் ராஜாவாடி மருத்துவமனை இதுவரை யாரையும் பதிவு செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்

காசநோய் எதிர்ப்பு மருந்துகள் எதிர்ப்புத்தன்மையைப் பற்றி ஆராய்ந்து வரும் இதய மருத்துவர் டாக்டர் ராஜேந்திர நானாவேர், “வெறுமனே, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட காசநோய் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருந்திருக்க வேண்டும், ஏனெனில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்கனவே குறைவாக உள்ளது. ஆனால், நான் இதுவரை அதுபோன்றதொரு எந்த நோயாளியையும் அறியவில்லை. காசநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் நகரத்தின் பிற நுரையீரல் நிபுணர்கள் இதேபோன்ற போக்கைக் கவனித்துள்ளனர். ஆனால் இந்த போக்கு உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்னர் சரியான சான்றுகள் பெறப்பட வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்” என்றார்.

இந்துஜா மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் டாக்டர் லான்சலோட் பிண்டோ கூறுகையில், “பல மருத்துவமனைகளின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு மூடப்பட்டதால், நோயாளிகளுக்கு சுகாதார சேவையை அணுக முடியவில்லை. COVID-19 நோயாளிகளிடையே நாள்பட்ட நுரையீரல் நோய் ஒரு ஆபத்து காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், தன்னிச்சையாகவே, காசநோய் நோயாளிகளிடையே, கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இதுவரை, எந்த காசநோய் நோயாளியும் வைரஸ் தொற்றுக்கு சாதகமாக இருந்ததை நான் பார்த்ததில்லை. வேறு எங்கேயும் இருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

இது உண்மையாக மாறும்பட்சத்தில் கொரோனா எதிர்ப்புக் களத்தில் ஒரு புதிய ஆயும் உருவாகும் வாய்ப்புகள் மிகப் பிரகாசமாகத் தெரிவதை உணர முடிகிறது. நல்லதே நடக்கும் என்று நம்புவோமாக!