திருப்பதி விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு: காவல்துறையை கண்டித்து சந்திரபாபு நாயுடு தரையில் அமர்ந்து தர்ணா

திருப்பதி: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தெலுங்கு தேசம் சார்பாக, சித்தூர் மாவட்ட தேர்தலில் களம் காணும் பெண்ணின் கணவருக்குச் சொந்தமான ஒன்று, மாநகராட்சி அதிகாரிகளால் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சியினரை தேர்தலில் இருந்து விலக இப்படி செய்வதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. போராட்டத்திற்கு உள்ளூர் போலீஸார், தேர்தல் நடத்தை விதிகள், கொரோனா தாக்கம் ஆகியவற்றை முன் வைத்து அனுமதி  மறுத்தனர். ஆனாலும் சந்திரபாபு நாயுடு, தடையை மீறி போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தார்.

அவரை திருப்பதி விமான நிலையத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது சந்திரபாபு நாயுடு, மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் பார்க்க வேண்டும் என்றார். அதற்கு காவல் துறை அனுமதியளிக்கவில்லை.

இதனையடுத்து அவர் விமான நிலையத்திலிருந்தே தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது: என்ன இது? மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க எனக்கு அடிப்படை உரிமைகள் இல்லையா? நாட்டில் என்ன நடக்கிறது? நான் முதல்வராக 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்.

நான் எதிர்க்கட்சித் தலைவர். என்னை ஏன் தடுக்கிறீர்கள். நீங்கள் எனக்கு அனுமதி வழங்கவில்லை. நான் இங்கேயே உட்கார்ந்து கொள்வேன் என்று போலீசாரிடம் கேள்வி எழுப்பி தர்ணாவில் உட்கார்ந்தார். இதனையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.