ஆட்சி அமைக்க மும்முரம்: மாயாவதி, அகிலேஷ் யாதவை சந்திக்க சந்திரபாபு நாயுடு உ.பி. பயணம்

லக்னோ:

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மத்தியில் ஆட்சி அமைக்க பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைக்க தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், மாநில கட்சிகளின் ஆதரவுடன் 3வது அணி ஆட்சி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில்.  ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி நிறுவனர் அரவிந்த கெஜ்ரிவால் ஆகியோரை  சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது,  தேர்தல் முடிவு மற்றும் ஆட்சி அமைப்பது குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது.

மேலும் இன்று  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ்ஆகியோரை  சந்தித்து கூட்டணி மற்றும் மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு,  பாஜகவிற்கு எதிரான கூட்டணியில் எந்த கட்சி இணைந்தாலும், அதனை வரவேற்பதாகவும், இதுதொடர்பாக தான் ஒவ்வொரு தலைவரையும் சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். தங்களது அணியில்  தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் இணைந்தாலும் வரவேற்போம் என்றும் கூறினார்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ், பாஜக அல்லாத 3-வது அணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த அவர், திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.