தேநீர் வியாபாரியின் ஆட்சியில் அவதியுறும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் : தொழிற்சங்க தலைவர்

வுகாத்தி

தேநீர் வியாபாரி என தன்னை கூறிக் கொள்ளும் மோடியின் ஆட்சியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவதியுறுவதாக தொழிற்சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தின் முக்கிய பயிர் தேயிலை ஆகும்.   பல பெரிய தேயிலை தோட்டங்கள் இங்கு அமைந்துள்ளன.   இங்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.   இவர்களுடைய தொழிற்சங்கமான அசாம் தேயிலை தொழிலாளர் சங்கம் இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்சங்கங்களில் ஒன்றாகும்.   இந்த சங்கத்தின் தலைவர் ரூபேஷ் கோவாலா என்பவர் ஆவார்.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரூபேஷ் கோவாலா, “அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதி அருகே உள்ள தேயிலை தோட்டங்களில் ஒரு தொழிலாளிக்கு தினம் ரூ.167 ஊதியம் அளிக்கப்படுகிறது.   பாரக் அருகே உள்ள தேயிலை தோட்ட தொழிலாளிகள் ரூ.,145 தின ஊதியம் பெறுகின்றனர்.    கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது பிரதமர் மோடி இந்த தொழிலாளர்களுக்கு தின ஊதியமாக ரூ.350 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

ஆனால் 4 ஆண்டுகளாக எந்த ஒரு ஊதிய உயர்வும் அளிக்கப்படவில்லை.   கடும் போராட்டத்துக்குப் பிறகு இடைக்கால நிவாரணமாக தினம் ரூ.30 அளிக்கப்படும் என கடந்த ஜனவர்மாதம் ஒன்றாம் தேதி பாஜக ஆளும் அசாம் அரசு அறிவித்தது.    ஆனால் அந்த உயர்வு மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.   இதனால் தொழிலாளர்களுக்கு இரு மாதங்களுக்கு தினம் ரூ.60 இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே மோடி தான் வாக்களித்தபடி இங்குள்ள தொழிலாளர்களுக்கு தின ஊதியமாக ரூ.350 வழங்க உத்தரவிட வேண்டும்.   தன்னை தேநீர் வியாபாரி என சொல்லிக் கொள்ளும் பிரதமர் மோடியின் ஆட்சியில்  தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போதிய ஊதியமின்றி துயருற்று உள்ள்னர்” என தெரிவித்துள்ளார்.