இலவச பள்ளி நடத்தும் டீக்கடைக்காரர்!

கடந்த சில நாட்களாக வட இந்திய ஊடகங்களில் பேசு பொருள் ஆனவர் – பிரகாஷ் ராவ்.

அப்படி என்ன செய்துவிட்டார் இவர்?

ஒடிசா மாநிலம் கட்டாக் நகரைச் சேர்ந்த இவர் அங்குள்ள புக்ஸி பஜாரில் தேநீர் கடை நடத்தி வருகிறார்.

அதிலென்ன சேதி என்கிறீர்களா..?

கடந்த 17 வருடங்களாக தனது  டீ கடை மூலம் கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதியை  குடிசைப் பகுதி குழந்தைகளின் கல்விக்காகச் செலவழித்துவருகிறார் பிரகாஷ் ராவ்.

ஆம்… அவர்களுக்காக ஒரு பள்ளியே நடத்தி வருகிறார்… கட்டணமே வாங்காமல்!

இதுகுறித்து அவர் கூறுகையில், ” என் குடும்பத்தின் வறுமையான சூழல் காரணமாக என்னால்  படிப்பை தொடரமுடியவில்லை. வறுமையால் எனது படிப்பு சிதைந்தாலும், படிக்க வேண்டும் என்கிற கனவு எனக்குள் கனன்று கொண்டே இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.

ஒரு டீ கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு சொந்தமாக டீ கடை வைத்தேன்.

எனக்கு ஏற்பட்ட கல்வி இழப்பு, பிற மாணவர்களுக்கு வந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். ஆகவே, குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏழை சிறுவர் சிறுமியருக்கு அடிப்படைக் கல்வியை கற்றுக்கொடுக்க  முடிவெடுத்தேன்.

அவர்களுக்காக  `ஆஷா அஷ்வாசான்’ எனும் ஆரம்பப் பள்ளியை ஆரம்பித்தேன்’ என்கிறார் இவர்.

இந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை இருக்கிறது. கட்டணம் எதுவும் கிடையாது. முழுவதுமாக இலவச கல்விதான்.

இந்த  பள்ளியில், நாற்பதுக்கும்  மேற்பட்ட குடிசைப்பகுதியைச் சேர்ந்த ஏழை மாணவர்கள்  படித்துவருகின்றனர்.

61 வயதாகும் இவர் ஏராளமான தடவை ரத்ததானம் செய்துள்ளார்.

பிரகாஷ் ராவை வாழ்த்துவோமே!

கார்ட்டூன் கேலரி