தேநீர் வியாபாரியின் மகள் விமானப்படையின் விமானி ஆன சாதனை

நீமுச், மத்தியப் பிரதேசம்

த்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒர் தேநீர்க்கடைக்காரரின் மகள் இந்திய விமானப்படையின் விமானி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள நீமுச் பேருந்து நிலையத்தில் தேநீர்க்கடை நடத்தி வருபவர் சுரேஷ் கங்வால்.   இவருடைய மகள் அஞ்சல் கங்வால்.   இவருக்கு தற்போது 24 வயதாகிறது.   இவர் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டது.  அப்போது அங்கு ராணுவத்தினர் மீட்பு நடவடிக்கை நடத்தினர்.   அன்று முதலே இவருக்கு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தோன்றியது.

                                            தாய் தந்தையருடன் அஞ்சல்

அஞ்சல் வீட்டுக்கு மூத்த மகள்.   இவருக்குப் பின் ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர்.  அப்போதிருந்த சூழ்நிலையில் இவரால் உடனடியாக ராணுவத்தில் சேர இயலவில்லை.   அதன் பிறகு அவர் விமானப்படை பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.  மிகுந்த சிரமத்துக்கிடையில் அதில் தேர்ச்சி அடைந்துள்ளார்.    ஐந்து முறை முயன்ற பிறகே இவரால் அந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடிந்துள்ளது.

அந்தத் தேர்வில் கலந்துக் கொண்ட் 6 லட்சம் பேரில் 22 பேர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.  அதில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து அஞ்சல் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.    இந்த தேர்வில் வெற்றி பெற அவர் தனியார் நிறுவனத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார்.    அதற்கான பணத்தை அவர் தந்தையார் சுரேஷ் கடன் வாங்கி அளித்துள்ளார்.    தற்போது அஞ்சலின் தம்பி பொறியியல் கல்லூரியிலும் தங்கை 12ஆம் வகுப்பிலும் படித்து வருகிறார்கள்.

கடந்த 22 ஆம் தேதி அஞ்சல் இந்திய விமானப்படை பிரிவில் விமானிப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என அறிவிப்பு வந்துள்ளது.    இதனால் அவர் குடும்பம் மட்டும் இன்றி நீமுச் பகுதியே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.   அவர் தந்தை தன் மகளின் இந்த வெற்றியினால் தனது கடையின் பெயர் உலகுக்கே தெரிந்துள்ளது எனவும் மகளால் தன்னை அனைவரும் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.   இந்த மாதம் 30 ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் பயிற்சியில் அஞ்சல் சேருகிறார்.