திருவள்ளூர் மாணவர்களின் பாசப்போராட்டம்: பகவானின் பணியிட மாற்றம் நிறுத்தம்

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் பணியிட மாற்றம் பெற்ற பகவான் என்ற அரசு பள்ளி  ஆசிரியரை, அந்தப் பள்ளி மாணவர்கள் சூழ்ந்து கொண்டு, அங்கிருந்து போகக்கூடாது என்று கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டனர். இதன் காரணமாக அவரது பணியிட மாற்றத்தை தற்காலிகாக கல்வி அதிகாரி நிறுத்தி வைத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளியகரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பகவான் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவரை வேறு பள்ளிக்கு மாற்றி கல்வித்துறை உத்தரவிட்டது.

ஆசிரியர் பகவானை சூழ்ந்து கண்ணீர் விட்ட  பள்ளி மாணவ மாணவிகள்

இதையறிந்த மாணவர்களும், பெற்றோர்களும் அந்த ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது என போராட்டத்தில் குதித்தனர். அப்போது பணியிட மாறுதலுக்கான உத்தரவை தலைமை ஆசிரியரிடம் வாங்க வந்த அவரை, மாணவ மாணவிகள் சூழ்ந்துகொண்டு… சார் இங்கேயே பணியாற்றுங்கள்… எங்களை விட்டுச் செல்லாதீர்கள் என்று கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டனர். நீங்கள் பாடம் நடத்தினால் மட்டுமே நாங்கள் எல்லாம் பாஸாக முடியும்  என்று கண்ணீர் மல்க அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

மாணவ மாணவிகன் அன்புச்சிறைக்குள் சிக்கிய ஆசிரியர் பகவானும் கண்ணீர் விட்டார். செய்தறியாது திகைத்தார். அரசின் ஆணையை ஏற்க வேண்டுமே… என்ன செய்வது என திகைத்தார்.   இதை கண்ட பெற்றோர்களும், மற்ற ஆசிரியர்களும், ஆசியர் பகவானை தொடர்ந்து இதே பள்ளியில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் வலியுறுத்தினர்.

இதுகுறித்து  மாவட்ட கல்வி அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆசிரியர் பகவானின் பணி மாறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.