மாணவிக்கு பாலியல் ரீதியாக பேராசிரியைகள் மிரட்டல் – கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய நீதிபதி

நிர்மாலா தேவியை தொடர்ந்து வேளாண் கல்லூரி பேராசியர்கள் இருவர் மாணவியை பாலியல் ரீதியாக மிரட்டிய ஆடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலையில் உள்ள வேளாண் கல்லூரி பேராசிரியைகள் இருவர் மாணவி அவர்களின் பேச்சை கேட்கும்படியும், டிஜிபியால் கூட எங்களை ஒன்றும் செய்ய முடியாது எனவும் மிரட்டியுள்ளது அம்பலமாகி உள்ளது.

professors-audio-

சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் அருப்பு கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்து, பேசிய ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அதே பாணியில் மாணவியை அடிப்பணிய வைக்க மீண்டும் இரு பேராசிரியைகள் மிரட்டும் ஆடியோ வெளியாகி உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் பணிபுரியும் மைதிலி மற்றும் புனிதா என்ற பேராசிரியைகள் கல்லூரி விடுதி காப்பாளார்களாகவும் உள்ளனர். இருவர்கள் இருவரும் அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியிடம் பாலியல் ரீதியாக உரையாடிய ஆடியோ வெளியாகி உள்ளது.

ஆடியோவில் பேராசிரியைகள் மாணவியுடன் பேசியவை, “ நீயா தான் உன் பிரச்சினையை கொண்டுபோன.. உங்க அப்பாவை வரவழைத்து ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதி கொடுத்து விட்டு போகச்சொல். அப்படி கொடுத்தால் நீ இன்னும் 2 ஆண்டுகளில் படிப்பை முடித்துவிட்டு செல்லலாம். இல்லையென்றால் நீயே எனக்கு படிப்பு வேண்டாம் என்று கூறிவிட்டு சென்று விடு. இது உனக்கும், உன் அப்பாவுக்கும், டீனுக்குமான பிரச்சினை. உன் அப்பாவை கல்லூரிக்கு வரச்சொல். எத்தனை தகவலை நாங்கள் வெளியே கொண்டு போகாமல் இருந்திருக்கிறோம் தெரியாதா உனக்கு?

மைண்ட்ட ஒரு இடத்துக்கு செட் பண்ணு…மரம் மாதிரி திமிரா நிற்காத. உனக்கு மரியாதை கொடுத்து பேசுனா கிறுக்கு மாதிரி இருக்க. உனக்கு என்ன வேணாலும் செய்றோம்…நீ ஒத்துக்கல, உன் பெற்றோர் வந்து கேட்டால் நீ இங்கு வரவே இல்ல. எங்கயோ ஓடிப்போய்டனு சொல்லிடுவோம். உன் வாழ்க்கையை நாசமாக்கி விடுவோம். உனக்கு எதிராக குரல் கொடுக்க எங்களிடம் பல ஆதாரங்கள் உள்ளன.

போலீஸ் கேஸ் குடுப்பியா, எங்களை ஒன்னும் செய்ய முடியாது. ஒன்னு புரிஞ்சிக்க, பெரிய டி.ஜி.பி.யாலேயே எங்களை ஒன்னும் செய்ய முடியல. ஒன்னும் கிழிக்க முடியாது. எல்லாரும் கைய விரிச்சிடுவாங்க. உன்ன மாதிரி எத்தனை பொண்ணுங்கள நாங்க பாத்திருக்கோம். ஒழுங்கா நாங்க சொல்றத நீ கேட்டா, படிச்சி முடிச்சிட்டு போலாம். இல்லைனா, நீ படிக்கவே முடியாது. டீன் சொன்ன மாதிரி கேட்டுநட. இல்லைனா, எத்தன வரு‌ஷம் ஆனாலும் உன்னால படிச்சி முடிக்க முடியாது.

இது ஒரு சின்ன வி‌ஷயம். சீக்கிரமா மறந்து போயிடும். கல்யாணம் பன்னிட்டு ஒரு குழந்தை பெத்துகிட்ட பிறகு நினைச்சு பாத்தா, இது ஒரு வி‌ஷயமாவே தெரியாது. சீக்கிரமா முடிவெடுத்து சொல் “ என அவர்கள் மாணவியிடம் மிரட்டி பேசி உள்ளனர். இதில் மாணவியை பற்றிய ஆதாரம் உள்ளதாக பேராசிரியைகள் குறிப்பிட்டு தெரிவித்துள்ளனர். அந்த ஆதாரம் எது சம்பந்தமானது என்பது தெரியவில்லை. மேலும் பல மாணவிகள் பற்றியும், டீன் குறித்தும் குறிப்பிட்டு பேசி உள்ளனது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அப்பகுதி கிராம மக்கள் மாணவியின் பெற்றோருடன் இணைந்து கல்லூரி முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த டி.எஸ்.பி. பழனி கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது கல்லூரி பேராசிரியை பாலியல் ரீதியாக மிரட்டியதாக பாதிக்கப்பட்ட மாணவி 40 பக்கத்திற்கு புகார் அளித்தார். இதனை தொடர்ந்து பேராசிரியர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி திருவண்ணாமலை மக்கள் நீதிமன்றத்தில் தனது தந்தையுடன் ஆஜராகி மாவட்ட நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.

pricipal

அதன்பிறகு நீதிபதி மகிழேந்தி, மாணவி மற்றும் அவரது தந்தையிடம் விசாரணை நடத்தினார். பின்னர் வாழவச்சனூர் வேளாண் கல்லூரிக்கு சென்று உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.அப்போது மாணவிகள் அனைவரும் சொல்லி வைத்தார் போல் கல்லூரி முதல்வருக்கு ஆதரவாகவே பேசி உள்ளனர்.

அப்போது, பாலியல் ரீதியான ஆடியோ பேச்சு உண்மையானதில்லை என்று புகாரில் சிக்கியுள்ள கல்லூரி பேராசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடியோவில் செட்டப் செய்து பேச்சுகள் இணைக்கப்பட்டுள்ளது என்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நீதிபதி கூறியதாவது, “ இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க திருவண்ணாமலை எஸ்.பி.க்கு பரிந்துரை செய்யப்படும். அந்த விசாரணை முடிந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரியும்” என்று கூறினார். மேலும் 5 பேர் கொண்ட குழு கல்லூரியில் விசாரணை நடத்த உள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மைதிலி மற்றும் புனிதா விடுதி காப்பாளர்களாக இருந்ததை பயன்படுத்தி இரவு நேரத்தில் விடுதிக்கு உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் அடிக்கடி வந்து சென்றுள்ளார் எனவும், அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. தங்க பாண்டியனின் பாலியல் தொல்லையை மாணவி செல்போனில் ரகசியமாக ஆடியோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து, அதனை கல்லூரி முதல்வரிடம் கொடுத்து புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, மாணவியை சமரசப்படுத்தும் முயற்சியில் பேராசிரியர்கள் மைதிலியும், புனிதாவும் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பேராசிரியரின் ஆசைக்கு இணங்கினால், உன் வாழ்க்கை செட்டில் ஆகிடும் என மாணவியிடம் மூளைச்சலவை செய்ய முற்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.