டில்லி:
சிரியர் தினத்தையொட்டி பிளஸ்1 மாணவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 1 மணி நேரம் வரலாறு பாடம் நடத்தினார்.
1a pranab1
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5–ந்தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ராதாகிருஷ்ணன் ஆசிரியராக இருந்து பின் நாளில் அரசியலில் ஈடுபட்டு ஜனாதிபதி ஆனவர். அவரைபோலவே தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் அரசியலுக்கு வருவதற்கு முன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அரசு பள்ளியில் மாணவ– மாணவிகளுக்கு ஜனாதிபதி எடுக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் அழைப்பு விடுத்தனர்.
அதனை ஏற்று, நேற்று  டெல்லியில் உள்ள ராஜேந்திர பிரசாத் சர்வோதயா வித்யாலயா அரசு மேல்நிலைப் பள்ளியில்  பிளஸ்–1, பிளஸ்–2 வகுப்புகளை சேர்ந்த 80 மாணவ–மாணவிகளுக்கு இந்திய அரசியல் வரலாறு குறித்தும், சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் வளர்ச்சி குறித்தும் அவர் பாடம் நடத்தினார்.
சுமார் 1 மணி நேரம் பாடம் எடுத்த ஜனாதிபதி, இந்தியா உள்பட உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்தும் மாணவ–மாணவிகளுக்கு விளக்கினார்.
1prezteaching
முன்னதாக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரணாப் முகர்ஜி,
‘‘ஆசிரியர் தினமானது நமது தேசத்து ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையை அங்கீகரிக்கும் நாளாகும். இந்த நாளில் ஆசிரிய சமூகத்தை சேர்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்’’ என்றும், ‘‘முன்மாதிரியான ஆசிரியர்கள் சிறந்த கல்வி அமைப்பின் தூண்களாக விளங்குகின்றனர். ஆசிரியர் என்பவர் மாணவர்களின் தனிப்பட்ட இலக்கை சமுதாயத்தின் இலக்கோடும், தேசத்தின் இலக்கோடும் இணைக்கக்கூடியவர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தியாகம், சகிப்புத்தன்மை, பன்முக நோக்கம், புரிந்து கொள்ளுதல் மற்றும் இரக்கப்படுதல் உள்ளிட்ட கலாசார மதிப்புகளை புகட்ட வேண்டும்’’ என தெரிவித்தார்.
ஏற்கனவே, கடந்த ஆண்டும் ஜனாதிபதி, இதேபோல் ஆசிரியர் தினத்தின் போது மாணவ–மாணவிகளுக்கு பாடம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.