Random image

ஆசிரியர் தினத்தில் நெகிழ்ச்சி: 10வயது மாணவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிய ஆசிரியர்கள்

இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், லக்னோவில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர்கள் தங்களால் இயன்ற அளவில் நிதி அளித்து 10 வயதுடைய மாணவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்துள்ளனர். ஆசிரியர் தினத்தன்று அவர்கள் செய்த இந்த உதவி ஆசிரியர்கள் – மாணவர்களின் உறவை மேம்படுத்துவதாகவே அமைந்தது.

teacher

கடந்த 2013ம் ஆண்டு உத்திரபிரதேசம் மாநிலம், லக்னோவில் வசித்து அனஸ் ஸ்ரீவஸ்தவா என்ற ஐந்து வயது சிறுவனுக்கு அடிக்கடி கை மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படும். அப்போது அந்த குழந்தையின் பெற்றோர், குளுமை காரணமாக இவ்வாறு கை, கால்கள் வீங்குவதாக கருதினார். அடுத்த சில நாட்களிலேயே அவர்களுக்கு மிகப்பெரிய பேரிடி காத்துக் கொண்டிருந்தது. அது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், வலியையும் அளித்தது.

சிட்டி பப்ளிக் பள்ளியில் எல்கேஜி படித்து வந்த அனஸ்க்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அதன் காரணமாகவே அவரது கை, கால்கள் வீங்குகின்றன என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுவனுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். அனஸ் 10 வயது அடைந்த உடன் மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டுமெ என மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறினர்.

அதுவரை வாரம் இருமுறை அவருக்கு டயலிசிஸ் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 5 வருடங்களாக அனஸிற்கு வாரம் இருமுறை டயலிசிஸ் செயப்பட்டு மருத்துந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர் காரம் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக் கொள்ள கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது அனஸ் 10 வயதை எட்டியுள்ளார். இந்த ஆண்டிற்குள் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு உதவிப்புரிய அவரது பள்ளி ஆசிரியர்கள் முன்வந்துள்ளது. அனஸ் லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே அனஸ் பள்ளிக்கு செல்வார். வாரத்தில் இருமுறை டயலிசிஸ் செய்யப்படுவதால் அனஸ் பள்ளிக்கு செல்லமாட்டார். இதனை ஏற்றுக் கொண்ட பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும், சக மாணவர்களும் அனசின் படிப்பிற்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர்.

அனஸ் மருத்துவ செலவிற்கு தேவைப்படும் தொகையை அளிக்க பள்ளி ஆசிரியர்கள் முடிவெடுத்து தங்களால் இயன்ற தொகையை அளித்தனர். அவர்கள் அளித்த ரூ. 2 லட்சத்து 151 க்கான காசோலையை அனசின் பெற்றோரிடம் பள்ளியின் முதல்வர் மீனா அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில் “ அனஸ் நல்ல மாணவர், அவர் வீட்டுப்பாடங்களை சரியாக செய்து வருவார். பள்ளிக்கு வரமுடியாததால் அனல் ஒரு சில பாடங்களில் தோல்வியடைந்தால், சக மாணவர்கள் அவருக்கு உதவி புரிவார்கள் “ என தெரிவித்தார்.

இது தொடர்பாக அனசின் தந்தை அனூப் ஸ்ரீவஸ்தவா பேசுகையில் “ அனல் படிக்கும் பள்ளி ஆசியர்கள் அவருக்கு பல வழிகளில் உதவிகளை புரிந்துவருகின்றனர். அனசிற்கு வாரத்திற்கு இரு முறை டயலிசிஸ் செய்கிறோம். ஒரு முறை செய்வதற்கு ரூ.3000 ஆகும். தொடர்ந்து 5 வருடம் செய்து வந்துள்ளோம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 3லட்சம் செலவாகும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது 5 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வளவு தொகை எங்களிடம் இல்லாததால் முதல்வர் நிதியுதவிக்காக விண்ணப்பம் அனுப்பியுள்ளோம். ஆனால், இதுவ்ரை எந்தவித பதிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை “ என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் சிறுவனுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. அனசின் தாய் ஷாலினி சிறுநீரக கொடையாளியாக உள்ளார்.