ஆசிரியர்கள் போராட்டம்: மாணவர்களுக்கு பாடம் நடத்திய கோவை எம்எல்ஏ

கோவை:

மிழகம் முழுவதும் ஓய்வூதியம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று 3வதுநாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மாணவர்களின் கல்வி முடங்கி உள்ளது.

இந்த நிலையில் கோவை பகுதியில், பள்ளி மாணவர்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ பாடம் நடத்தினார். இது வியப்பை ஏற்படுத்தியது.

மாணவர்களுக்கு பாடம் எடுத்த அதிமுக எம்எல்ஏ

தமிழகம் முழுவதும் 3-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கோவை உக்கடம் அருகே மாணவர்களுக்கு அத்தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் பாடம் நடத்தியது அனைவரின் பாராட்டையும், வியப்பையும் ஏற்படுத்தியது.

ஆசிரியர்கள் போராட்டத்தால் வெறிச்சோடி கிடந்த  கோவை உக்கடத்தை அடுத்த கோட்டை மேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு வருகை தந்த, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் அம்மன் அர்ஜூனன். பள்ளிக்கு வந்திருந்த சில குழந்தைகளையும் வகுப்பறையில் உட்கார வைத்து பாடம் நடத்தினார்.

எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அவர்களின் புத்தகங்களை வாங்கி சில பாடங்கள் குறித்து விளக்கம். இந்த செய்தி அந்த பகுதியில் பரவியதை தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள் பள்ளியில் திரண்டு எம்எல்ஏ பாடம் நடத்துவதை பார்வையிட்டனர்.

இதுகுறித்து கூறிய எம்எல்ஏ  அம்மன் அர்ஜூனன், ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி கெட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே பாடம் எடுத்ததாகவும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பி அவர்களுக்கு  பாடம் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.