ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மீண்டுமொரு ஊழல்: 200 ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு

சென்னை:

சிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட,  தகுதி தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்து பதிவேற்றிய போது, சுமார்   200 ஆசிரியர்கள் தேர்வு விடைத்தாளில் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்ததுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின்  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், தற்போது ஆசிரியர்கள் தகுதி தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 7ந்தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த முறைகேடு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில்  மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 34 ஆயிரத்து 979 பேர்  தேர்ச்சி பெற்றனர். இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. அதையடுத்து, தேர்வு விடைத்தாள்கள் மீண்டும் திருத்தப்பட்ட  இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்கள் ஒவ்வொருவரின் விடைத்தாளும்   ஸ்கேன் செய்து பதிவேற்றப்பட்டது.

இதில், ஏற்கனவே வெளியான பட்டியலுக்கும் இதற்கும் வித்தியாசம் ஏற்பட்டது.  சுமார் 200 ஆசிரியர்கள் பெயர் விடுபட்டிருந்தது. இதுகுறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, விடுபட்ட 200 ஆசிரியர்களுக்கும்  போலி மதிப்பெண்களை அளித்து தேர்வு செய்யப்பட்டு இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

இதுபற்றி விரிவாக விசாரணைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.