சென்னை:

“பிள்ளைகள் மீது பெற்றோர்களுக்கு இல்லாத கரிசணம் ஆசிரயர்களுக்கு எதற்கு” என்று அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொறுப்பாளர் துரை.மா.வளர்மதி  விரக்தி அறிக்கை விடுத்துள்ளார். இதை ஆசிரியர்கள் பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

சேலம் அருகே கோட்டக்கவுண்டம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் முருகன் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக பெற்றோரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து, முருகனை அடித்து உதைத்தனர்.  பிறகு காவல்துறையினர் வந்து முருகனை மீட்டனர்.

படம்: மாடல்

சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது. அப்போது முருகன், தான் பாட ரீதியாகவே அம்மாணவியை கண்டித்ததாகவும் அதை பெற்றோர் தவறாக புரிந்துகொண்டனர் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவின் பேரில் சங்ககிரி மாவட்ட கல்வி அதிகாரி செல்வராஜ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அப் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

“ஆசிரியர் முருகன், எந்தவொரு மாணவிக்கும் பாலியல் தொல்லை தரவில்லை” என்று சக ஆசிரியர்களும், மாணவிகளும் தெரிவித்தனர்.

பிறகு செய்தியாளர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, “விசாரணையில், ஆசிரியர் முருகன் மீது மாணவி பொய்ப்புகார் கூறியது தெரியவந்தது.  ஆசிரியர் முருகன், மாணவிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.  பள்ளிக்குள் புகுந்து அவரைத் தாக்கியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

ஆசிரியரை பெற்றோர் தாக்கிய போது..

இந்த நிலையில் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொறுப்பாளர் துரை.மா.வளர்மதி என்பவர் விடுத்துள்ள அறிக்கையில், “ ஆசிரியர் முருகன் கடந்த 5 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி கொடுத்தவர்.

அந்த எட்டாம் வகுப்பு மாணவி ஒரு இளைஞனுடன் காதலில் ஈடுபட்டுள்ளார் இதை அறிந்த ஆசிரியர் முருகன் கண்டித்துள்ளார். மேலும் அவர் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்து விடுவாரோ என்று பயந்து மாணவி பொய்ப்புகார் தெரிவித்துள்ளார்.

தற்போது விசாரணையில் முருகன் நல்ல ஆசிரியர் என்பது தெரியவந்துள்ளது. இப்பொழுது என்ன செய்ய போகிறார்கள் அந்த மாணவியும் பெற்றோர்களும் காதலனும் ஊரார்களும்…?” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார் துரை.மா. வளர்மதி.

மேலும், “இது குறித்த செய்தியை உடனடியாக ஒளிபரப்பியது பாலிமர் டிவி. அந்த டிவிக்கு எதற்கு இந்த முந்திரி கொட்டை தனம். மானங்கெட்ட பொழப்பு. ஆசிரியன் என்றாலே பாலியல் தொல்லை கொடுப்பவன்தான் என்று சமீப காலமாக தவறாகவே ஒளிபரப்பு செய்து வருகிறது இந்த சேனல். இவர்கள்.சேனல் நடத்துவதற்கு பதிலாக விடுதி நடத்தலாம் மக்களே”  என்றும்  ஆத்திரத்துடன் தெரிவித்துள்ளார்.

பாலியல் புகார் செய்தி

அதோடு, “ஆசிரியப் பெரு மக்களே…!
பள்ளிக்கு எதற்கு செல்கிறோமோ அந்த வேலையை மட்டும் செய்வோம். உயர் அதிகாரிகளிடம் மெமோ வாங்கிக் கொள்ளலாம்…அது நான்கு சுவருக்குள் முடிந்துவிடும்.

ஒழுக்கத்தை கற்று கொடுக்காத பெற்றோருக்கு இல்லாத கரிசணம் உங்களுக்கு எதற்கு…?”  என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஆசிரியர் மீது தவறில்லை என்று அதிகாரிகள் தெரிவித்த செய்தி..

அவரது இந்த அறிக்கையை ஆசிரியர்கள் பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இது குறித்த நமத பார்வை:

அ. மாணவர்களைக் கண்டித்தால், மெல்ல அடித்தால் உடனே பெற்றோர்கள் காவல்துறையில் புகார் தருவதும் ஆசிரியர்கள் கைது செய்யப்படுவதும் நடக்கிறது. இப்போது  நல்ல நோக்கத்துடன் மாணவியை கண்டித்த ஆசிரியர் மீது அபாண்டமாக பாலியல் குற்றச்சாட்டு சொல்லப்பட்டிருக்கறது.  இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது. இது போன்ற போக்குகள் பாதுகாப்பில்லாத உணர்வை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தி விடும்.

ஆ. ஆசிரியர் முருகன் நல்லாசிரியர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே நேரம், வகுப்புக்கு மது அருந்திவிட்டு வரும் ஆசிரியர்கள், பாலியல் சீண்டல் செய்யும் ஆசிரியர்கள் குறித்தும் செய்திகள் வெளியாகி வருவதும் உண்மை.

ஒரு காலத்தில் ஆசிரியர் என்பது மரியாதைக்குரிய பணியாக இருந்தது. ஆனால் சமீபகாலமாக ஆசிரயர் பணி என்பது மக்களிடையே மரியாதை இழந்து நிற்பது சோகம். இந்த சூழலைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளி மற்றும் ஆசிரியர் தரத்தை உயர்த்த உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

. தங்கள் மீதான மரியாதையை உயர்த்திக்கொள்ள ஆசிரிய சமுதாயமும் முயல வேண்டும். குறிப்பாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அக்கறை செலுத்துவதில்லை என்ற புகார் நீண்டகாலமாக இருக்கிறது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்கவைக்கிறார்கள் என்பதில் இருந்தே இதை உணர முடியும் என்கிற விமர்சனமும் உண்டு.

ஆசிரியர் கூட்டமைப்பு விரக்தி அறிக்கை

இதற்கு விதிவிலக்கான ஆசிரியர்கள் உண்டுதான். ஆனால் விதிவிலக்குகளே விதியாக முடியாது. அனைத்து ஆசிரியர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால்தான் ஒட்டுமொத்தமாக ஆசிரியர் சமுதாயத்தின் மீது மரியாதை ஏற்படும்.

ஈ. குறிப்பிட்ட இந்த விவகாரத்தில் “அந்த மாணவி காலித்தார், தவறான நடத்தை உள்ளவர்” என்றெல்லாம் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொறுப்பாளர் துரை. மா.வளர்மதி கூறியிருக்கிறார். இதைத் தவிர்த்திருக்கலாம். மாணவி பொய்ப்புகார் கூறியது மிகத் தவறே. ஆனால் அந்த மாணவியோடு சரிக்கு சரியாக ஆசிரியர்கள் நிற்கத் தேவையில்லை.

உ. ஆசிரியர் முருகனை பள்ளிக்குள் புகுந்து அடித்தவர்கள் அம்மாணவியின் பெற்றோரும், உறவினர்களும். அவர்கள்தான் ஆசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். மாணவியும் தெரிவித்திருக்கிறார்.  இந்த செய்தியை வெளியிட்டதற்காக தொலைக்காட்சி மீது வன்மம் காட்டுவது சரியல்ல. குறிப்பிட்ட ஆசியர் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றமற்றவர் என்று தெரிவிக்கப்பட்டதையும் ஊடகங்கள் வெளியிட்டுள்ளதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.

ஊ. அதே போல ஆசிரியர் கூட்டைப்பின் அறிக்கையில், “விடுதி நடத்தலாம்” என்று எழுதும் அளவுக்கு தங்கள் தரத்தினை ஆசிரிய பெருமக்கல் கீழிறக்கிக் கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது.

. மேலும் அந்த அறிக்கையில் வார்த்தைகள் கோர்வையாக இல்லை. எழுத்துப் பிழைகளும் உள்ளன. ஆசிரியர்களும் தங்கள் தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு அவர்கள் முயல்வதோடு, அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.