அரசுப் பொதுத்தேர்வு நேரம் குறித்து மாணாக்கர்களுக்கு விளக்க அறிவுறுத்தல்

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் பிரிவுகளுக்கான (11 & 12) பொதுத்தேர்வுகள் துவங்கும் நிலையில், தேர்வு நேரம் குறித்து மாணாக்கர்களுக்கு தெளிவான விளக்க வேண்டுமென, கல்வித்துறை அதிகாரிகள் சார்பில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

அதில், தேர்வெழுதும் நேரத்தை 2.5 மணி நேரத்திலிருந்து, 3 மணிநேரமாக அதிகரிக்க, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 3 மணிநேரமாக, தேர்வெழுதும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாளை வாசித்துப் பார்க்க, காலை 10 முதல் 10.10 மணிவரை 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும். விண்ணப்பதாரர்களின் விபரங்களை, தேர்வறை கண்காணிப்பாளர்கள் சரிபார்க்க 10.10 முதல் 5 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.

அதன்பிறகு, 10.15 முதல் பகல் 1.15 மணி வரை மொத்தம் 3 மணிநேரம் தேர்வு எழுதுவதற்கான நேரம் ஒதுக்கப்படும். இந்தத் தகவலை, அனைத்து மாணாக்கர்களுக்கும், ஆசிரியர்கள் தெளிவாக விளக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.