உயர்கல்வி நடைமுறை அவசர கதியில் மாற்றம்….மத்திய அரசு மீது ஆசிரியர்கள் புகார்

டில்லி:

இந்திய பல்கலைக்கழகங்களில் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும், நிதியுதவி அளிக்கவும் யூஜிசி என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழக மானிய குழுவான இந்த அமைப்பின் 1956ம் ஆண்டு சட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையம் 2018 என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான வரைவு திட்ட அறிக்கையை மக்களின் பார்வைக்காக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 850 பல்கலைக்கழகங்கள் மற்றும் 40 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. இந்த புதிய வரைவு திட்ட அறிக்கையில் ஏற்கனவே உள்ள யூஜிசி நடைமுறையில் இருந்து பெரிய அளவிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘‘தற்போது அரசு கல்வி நிறுவனங்களுக்கான அரசின் நிதி தன்னாட்சி அதிகாரம் கொண்ட யூஜிசி மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. இனி அமைச்சகம் மூலமே நிதி வழங்கும் வகையில் மாற்றம் செய்யப்படுகிறது. அமைச்சகம் அல்லது மாற்று ஏற்பாடு மூலம் நிதியுதவி சென்றடையும்’’ என்று உயர்கல்வி துறை செயலாளர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

‘‘இந்திய உயர்கல்வி ஆணையம் முழுக்க முழுக்க தரத்தில் கவனம் செலுத்தும் வகையில் சுதந்திரமாக செயல்பட அனுமதி வழங்கப்படும். குறிப்பாக படித்து வெளியேறும் மாணவர்களின் தரம் கவனத்தில் எ டுத்துக் கொள்ளப்படும். கல்வி நிறுவனங்களில் செயல்பாடுகள் ஆண்டுதோறும் மதிப்பீடு செய்யப்படும். குறைந்தபட்ச தரத்தை பராமரிக்காத கல்வி நிறுவங்களை மூடும் நடவடிக்கையையும் ஆணையம் மேற்கொள்ளும்.

தற்போது உள்ள யூஜிசி தரமில்லாத கல்வி நிறுவனங்களில் பட்டியலை மட்டுமே வெளியிடும் அதிகாரம் கொண்டது. தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. கல்வி முறையும் முற்றிலும் மாறிவிட்டது. அதனால் முதலில் சமூகத்திற்கு தேவையான கல்வி முறையை கொண்டு வரவேண்டும். கல்வி திறனில் இ ந்தியாவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்’’ என்றார்.

இந்த வரைவு திட்ட அறிக்கை தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் வல்லுனர்கள் வரும் 7ம் தேதிக்கும் பார்வையிட்டு கருத்துக்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 நாட்கள் மட்டுமே அவசாகம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பல்கலைக்கழகம், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களால் இதில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விவாதிக்க டில்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வரும் 3ம் தேதி ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. யூஜிசி.க்கு மாற்றாக இந்திய உயர்கல்வி ஆணையத்தை அவசர கதியில் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது என்று ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன,.