கடந்தமுறை அப்படி…. இந்தமுறை இப்படி…!

கடந்த 2015ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின்போது, சில ஊடகங்கள் அப்போதைய கேப்டன் மகேந்திரசிங் தோனியின் புராணம் பாடுவதை ஒரு பகுதிநேர தொழிலாகவே வைத்திருந்தன.

இந்திய அணிக்கு வேறு எதுவுமே வேண்டாம். தோனியின் கேப்டன்சி இருந்தால் அதுவே போதும், கோப்பை வெல்வதற்கு..! என்பன போன்ற தேவைக்கு அதிகமான மற்றும் வழக்கத்திற்கு மாறான வகையில், சலிப்பை ஏற்படுத்துவதாக இருந்தன சில ஊடக கிரிக்கெட் விமர்சகர்களின் மதிப்பீடுகள்.

ஆனால் நடந்தது என்ன? மிகவும் பிரமாண்டமான முறையில் புகழப்பட்ட தோனி, தன் அணியை அரையிறுதியோடு தாய்நாட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். பெரிதாக கவனிக்கப்படாமல், தன் பணியை அமைதியாக செய்துகொண்டிருந்த மைக்கேல் கிளார்க், ஆர்ப்பாட்டமே இல்லாமல் தன் அணிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்துவிட்டார்.

கடந்த உலகக்கோப்பை தொடரில், தோனி இறங்கிவிட்டாலே அணிக்கு மாயாஜாலம் செய்தாவது கோப்பையை வாங்கிக்கொடுத்து விடுவார். எனவே, இந்திய அணியைப் பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை என்கிற அளவிற்கு சிலாகித்த அந்த சில ஊடக கிரிக்கெட் விமர்சகர்கள், இந்த முறை இந்திய அணியைப் பற்றி தொடர்ச்சியாக எழுதுவதோ வேறாக உள்ளது.

அதாவது, இந்திய அணியில் பனிப்போர் நிலவுவதாகவும், கேப்டன் விராத் கோலி கடும் மன நெருக்கடியில் இருப்பதாகவும், இந்திய அணி தனித்தனி குழுக்களாக செயல்படுவதாகவும், ஒற்றுமையின்மை நிலவுவதாயும் எழுதுகிறார்கள்.

மேலும், ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியதை ஒட்டி, ஒரு கடும் போராட்டமே அணிக்குள் நடந்துவருவதாகவும் எழுதுகின்றனர். எனவே, நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டம் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கப் போகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

ஆனால், தொடக்கம் முதலே இந்திய அணியில் பிரச்சினை உள்ளது என்று இவர்கள் எழுதிவந்த நிலையில், இந்திய அணி தான் ஆடிய 2 ஆட்டங்களிலும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யாரும் எதிர்பாராத வண்ணம் மிகவும் சிறப்பாக ஆடியது. 32 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக்கோப்பை லீக் ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியாவை வென்ற சாதனையையும் கோலியின் அணி செய்தது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சற்று தடுமாறினாலும், வெற்றி உறுதி என்ற இலக்கில் தெளிவாக இருந்தது இந்திய அணி. நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டம் மழையால் தடைபடாமல் இருந்து, அதிலும் இந்திய அணியின் செயல்பாட்டைப் பார்த்துவிட்டால், நம்மால் கிட்டத்த சில விஷயங்களை அறுதியிட்டுவிட முடியும்.

எனவே, இல்லாத விஷயத்தைப் பெரிதாக மிகைப்படுத்துவதும், இருக்கும் விஷயத்தை மறைப்பதும் தேவையற்ற ஒன்றே…

Leave a Reply

Your email address will not be published.