அபுதாபி: ஐபிஎல் தொடரில் மிகச் சமீபத்தில் இணைந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களின் தனிமைப்படுத்தல் விஷயத்தில், பிசிசிஐ அதிக சலுகை காட்டியதாக குற்றம் சுமத்துகின்றனர் ஐபிஎல் அணி உரிமையாளர்கள்.

இங்கிலாந்தில் ஒருநாள் தொடர் முடிந்ததும், ஆஸ்திரேலியா & இங்கிலாந்து ணி வீரர்கள் மொத்தம் 21 பேர் அமீரகம் வந்தனர். மற்ற வீரர்களுக்கு 6 நாட்கள் தனிமைப்படுத்தல் விதி அமல்செய்யப்பட்ட நேரத்தில், இவர்களுக்கோ வெறும் 36 மணிநேரங்களே என்று வரையறை செய்யப்பட்டது.

ஆனால், அந்த சாதாரண விதியும்கூட மீறப்பட்டது. சென்னை அணியின் சாம் கர்ரன் வெறும் 4 மணிநேரத்தில் அணியுடன் இண‍ைந்துள்ளார். எனவேதான் பொறிந்து தள்ளியுள்ளனர் அணி உரிமையாளர்கள்.

“இந்த வீரர்கள்தான் முக்கியமென்றால், தொடரை இன்னும் 3 நாட்களுக்கு தள்ளி வைத்திருக்கலாமே? நாங்கள் மிகவும் சிரமப்பட்டு ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளோம். போட்டியில் வெற்றி – தோல்வி என்பது இரண்டாம் பட்சம்.

ஆனால், வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியம். பிசிசிஐ இந்த விஷயத்தில் பாரபட்சத்துடன் இரட்டை வேடம் போடுகிறது” என்றுள்ளனர் அவர்கள்.