சொன்னதை செய்யாத பொறியாளர் கடத்தல் – மீட்டது காவல்துறை!

ஐதராபாத்: ஒப்புக்கொண்ட பணியை செய்து கொடுக்காத காரணத்தால், வாடிக்கையாளரால் கடத்தப்பட்ட ஆந்திர மென்பொருள் பொறியாளர் ஒருவர், காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளார்.

சிட்டி கவுதம் குமார் எனும் பெயருடைய அந்தப் பொறியாளருக்கு வயது 27. ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தின் நுஸ்வித் என்ற ஊரைச் சேர்ந்தவர் அவர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக, ஐதராபாத்தின் போடுபல் என்ற இடத்தைச் சேர்ந்த விமலா குமாரி என்பவரிடம், சர்வர்களை அமைக்கவும், மென்பொருகளை மேம்படுத்தவும் ஒப்பந்தம் செய்து, ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தைப் பெற்றார்.

ஆனால், சொன்னபடி வேலையை முடிக்காத காரணத்தால், கடந்த பிப்ரவரி 16ம் தேதி, அவர் விமலா குமாரியின் ஆட்களால் கடத்தப்பட்டார். பின்னர், குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்துக் கொடுக்கும்படி அவருக்கு நெருக்கடி தரப்பட்டதாகவும், ஆனால் அவரால் முடியாமல் போனதால், வாங்கியப் பணத்தை திருப்பி தருமாறு அவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், எப்படியோ தனது செல்போனை எடுத்து தனது சகோதரருக்கு நிலைமையை விளக்கினார் கவுதம். பின்னர், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கவுதம் மீட்கப்பட்டார்.