தந்தையின் மருத்துவ செலவுக்கு பணமில்லை – தாய், தங்கையை கொன்று வாலிபர் தற்கொலை

 

விழுப்புரம்:

ந்தையின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத விரக்தியில் தாய், தங்கையை கொலை செய்து விட்டு மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டிவனம் ரோஷணை பகுதியில் உள்ள கெங்கைஅம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம், (46)  கடலூர் போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றி வரும் இவருக்கு சுமதி (40) என்ற மனைவியும், ரஞ்சித் (25 ) என்ற மகனும், வித்யபிரியா (24) என்ற மகளும் உள்ளனர்.

ரஞ்சித், வித்யபிரியா இருவரும் 12ம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலையின்றி வீட்டிலேயே  இருந்தனர்.

சமீபத்தில் ராஜாராமுக்கு உடலநலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.  சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கல்லீரல், சிறுநீரகம் செயலிழந்து விட்டதால் மாற்று சிறுநீரகம், கல்லீரல் பொருத்த ரூ.60 லட்சம் ஆகும் என்று மருத்துவமனை.யில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அந்த அளவுக்கு பணம் இல்லாததால், .விரக்தியில் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் எவருடனும்  பேசாமல் ஒதுங்கி இருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை முதல் நீண்ட நேரமாக சுமதியின் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.  இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் கதவை திறக்க முயன்றனர். ஆனால், கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

அங்கு சுமதி மற்றும் வித்யபிரியா இருவரும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக  கிடந்தனர். வித்யபிரியாவுக்கு முகம் எரிந்து நிலையில் இருந்தது. அருகிலேயே ரஞ்சித் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு இறந்து கிடந்தார்.

வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர், ரஞ்சித் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் தந்தைக்கு மருத்துவ சிகிச்சை செய்ய எங்களால் பண உதவி செய்ய முடியவில்லை. இதனால் மூவரும்  பேரும் தற்கொலை செய்து கொள்கிறோம் என எழுதப்பட்டிருந்தது.

மூவரின் உடல்களையும் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.