லக்னோ,

கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில் வசிக்கும் 17 வயதான இளம்பெண் பள்ளிக்கு செல்லும் வழியில், கொலை செய்யப்பட்டார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக அந்த கிராமத் தலைவரின் மகன்  கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

17 வயதான பள்ளி மாணவியான  இளம்பெண்ணை கிராமத்தலைவரின் மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து 6 மாத மாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதையறிந்த அந்த பெண்ணின் பெற்றோர், கிராமத்தலைவரிடம் அவரது மகன் குறித்து புகார் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தலைவரின் மகன் மற்றும் அவரது நண்பர் 3 பேர் சேர்ந்து இரண்டு பைக்கில் வந்தனர். சம்பவத்தன்று  பள்ளிக்கு  சென்றுகொண்டிருந்த அந்த இளம்பெண்ணை கீழே தள்ளினர். கீழே விழுந்த அவரது கழுத்தை கிராமத்தலைவரின் மகன் கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கேள்விப்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், இளம்பெண்ணை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்காதவரை மகளின் உடலை வாங்கமாட்டோம் என்று அந்த இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி உள்ளனர்.

இந்த கொலையில் ஈடுபட்ட கிராமத்தலைவரின் மகன், 22வயதுடைய பிரின்ஸ் திவாரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உடந்தையாக இருந்த மற்ற 3 பேரையும் பிடிக்க வலைவீசி தேடி வருவதாகவும் போலீஸ் அதிகாரி விஜய்பால்சிங் கூறி உள்ளார்.

இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் கூறும்போது, கிராமத்தலைவரின் மகன் குறித்து,  கிராமத்தலைவரிடம் ஏற்கனவே புகார் கூறியதாகவும், ஆனால் அவர் தனது மகனை கண்டிக்கவில்லை என்று கூறினார்.

இறந்த இளம்பெண்ணின் சகோதரி கூறும்போது,  கிராமத்தலைவரின் மகன் பிரச்சினை காரணமாக, தனது சகோதரி பள்ளிக்கு செல்வதை தந்தை நிறுத்தி விட்டதாகவும், ஆனால் படிப்பு முக்கியம் என்று கருதியே மீண்டும் பள்ளிக்கு சென்றதாக சோகத்துடன் கூறினார்.

உ.பி.யில் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றபிறகு பெண்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.