சென்னை:

சென்னை – மதுரைக்கு இடையே இயக்கப்பட்டு வரும் தேஜாஸ் அதிவேக ரயிலின் பெயரை, தமிழ்ச்சங்கம் எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று தெற்கு ரயில்வேக்கு மதுரை தொகுதி கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.யான வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அவர்  கொடுத்துள்ள மனுவில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கு,  வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் என தமிழகத்தின் பாரம்பரம் மிக்க பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் விடப்பட்டுள்ள அதிகவேக ரயிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரையும், தமிழ்ச்சங்கம் எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிவேக ரயிலான  ‘தேஜஸ் ரயில்’. கடந்த பிரப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சென்னையிலி ருந்து மதுரைக்கு வெறும் 6 மணி 30 நிமிடங்களில், சென்றடைகிறது. முழுவதும், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரயிலில் வைஃபை, சி.சி.டி.வி கேமரா, தீ புகை கண்டுப்பிடிக்கும் கருவி, ஜி.பி.எஸ் என விமானத்தில் உள்ளது போன்று வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளான.

முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி, முன்பதிவில்லா பெட்டிகள், ஜெனரேட்டர் பெட்டி என மொத்தம் இதில் 15 பெட்டிகள் உள்ளன.

மணிக்கு சுமார் 160 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், காலை 6 மணிக்கு சென்னை யிலிருந்து கிளம்பி, நண்பகல் 12.30-க்கு மதுரையை அடைகிறது. பிறகு அங்கிருந்து மீண்டும் மதியம் 3 மணிக்குக் கிளம்பி, இரவு 9.30-க்கு சென்னை வருகிறது.