மும்பை: இந்தியாவின் இரண்டு வழித்தடங்களில் தனியார்களால் இயக்கப்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் இன்னும் 2 மாதங்களில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி – லக்னோ வழித்தடத்தில் இயக்கப்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் சேவை வரும் அக்டோபர் 4ம் தேதி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், மும்பை – அகமதாபாத் தேஜாஸ் ரயில் சேவை நவம்பரில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை – அகமதாபாத் ரயில் சேவை வாரத்தில் 6 நாட்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. காலை 6.40 மணிக்கு அகமதாபாத்தில் புறப்படும் ரயில், மதியம் 1.15 மணிக்கு மும்பையை அடையும். பின்னர், பிற்பகல் 3.40 மணிக்கு மீண்டும் புறப்படும் ரயில், இரவு 10.25 மணிக்கு அகமதாபாத்தை அடையும். பிரீமியர் ரயில் சேவையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் லக்கேஜ் வீட்டிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு, ரயிலில் வந்து வழங்கப்படும். பயணம் முடிந்ததும், பயணிகள் போகவேண்டிய இடத்திற்கே லக்கேஜ் கொண்டுசென்று வழங்கப்படும்.

இந்த ரயிலில் வணிகப் பொருட்களின் விற்பனையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்சி, பேருந்து, ரயில் மற்றும் விமானக் கட்டணங்களின் அடிப்படையில் இந்த தேஜாஸ் ரயில் பயணத்திற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.