டெல்லி – லக்னோ இடையிலான ஐஆர்சிடிசி -யின் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் ரூ.25 லட்சம் மதிப்பிலான இலவச ரயில் பயணக் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ரயிலில் பயணம் செய்வோருக்கு, ரயில் கட்டணத்திலேயே வீட்டிலிருந்து, ரயிலின் இருக்கை வரை தங்களின் பொருட்களை எடுத்துச்செல்லும் ஆட்களை அமர்த்துவதற்கான ஏற்பாடுகள், ரயில் நிலையங்களில் ஓய்வெடுப்பதற்கான சிறப்பு அறைகள் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் முதற்கொண்டு, தேஜாஸ் ரயில் சேவை இயக்கப்படவுள்ளது. டெல்லி – லக்னோ மற்றும் மும்பை – அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில்தான் ஐஆர்சிடிசி சார்பாக தேஜாஸ் ரயில் சேவைகள் முதன்முறையாக இயக்கப்படுகின்றன.

ரயில்வே துணை நிலை அமைப்பால் இயக்கப்படும் இத்தகைய சிறப்பு ரயில்கள், வரும் நாட்களில் இத்தகைய ரயில் இயக்கங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் ஒரு சோதனை முயற்சியாகும்.

அதேசமயம் இந்த ரயில்களில் பயணம் செய்வோருக்கு எந்தவித கட்டணச் சலுகையோ, duty pass போன்றவையோ கிடையாது. பயணம் செய்யும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த ரயிலில் டிக்கெட் பதிவுசெய்ய தட்கல் வசதியும் கிடையாது. பயணம் செய்வதற்கு 60 நாட்களுக்கு முன்னர் பதிவுசெய்து கொள்ளலாம். இதன் கட்டணங்கள் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.