லாலுவின் குடும்பம் குறித்து விமர்சித்த நிதீஷ்குமாருடன் தேஜஸ்வி மோதல்..

 

பாட்னா :

பீகார் மாநிலத்தில் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்-அமைச்சர் நிதீஷ்குமார் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

பிரச்சாரத்தின் போது நிதீஷ்குமார் “ஆண் குழந்தை பிறக்கும் என நினைத்து ஒருவர் நிறைய பெண் குழந்தைகளை உற்பத்தி செய்துள்ளார்” என ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவை விமர்சனம் செய்திருந்தார்.

அந்த பேச்சு இப்போது அங்குள்ள சமூக வலைத்தலங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனால் ஆவேசமான லாலுவின் மகனும், பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ், “எனது சகோதரிகளை ஏன் அரசியலுக்குள் இழுக்க வேண்டும்?” என நிதீஷ்குமாருக்கு கேள்வி விடுத்தார்.

“அடுத்து பெண் குழந்தை பிறக்குமோ என்ற அச்சத்தில் நிதீஷ்குமார் ஒரு ஆண் குழந்தையோடு விட்டு விட்டார் என மக்கள் கேட்க மாட்டார்களா?” என வினா எழுப்பிய தேஜஸ்வி, “எங்கள் குடும்பத்தில் கடைசி குழந்தை பெண் தான் என நிதீஷுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்” என்றும் விளாசினார்.

இதற்கு பதில் அளித்த நிதீஷ்குமார், “மக்கள் தொகை பெருக்கம் குறித்து மட்டுமே நான் நகைச்சுவையாக பேசினேன். யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. மற்றவர்கள் அப்படி நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்ய முடியும்?” என தெரிவித்துள்ளார்.

அரசியலில் குடும்ப விவகாரம் நுழைந்திருப்பது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– பா. பாரதி