பீகாரில் காங்கிரஸ் 70 தொகுதிகளிலும், ஆர்ஜேடி 144 தொகுதிகளிலும் போட்டி: தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிடும் என்று ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார்.

மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு வரும் 28ம் தேதி முதல் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் ஆகிய பணிகளில் அனைத்து கட்சிகள் மும்முரமாகி உள்ளன.

பீகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது. இக் கூட்டணியில் காங்கிரசுக்கு 70 இடங்களை வழங்க அந்த கட்சி முன் வந்துள்ளது.

எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து தொகுதி பங்கீடு முடிந்து அதன் விவரங்கள் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன. இது குறித்து ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பீகார் தேர்தலில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 6 தொகுதிகளிலும் களம் காணும்.

சிபிஐ எம்எல் கட்சியானது 19 தொகுதிகளில் போட்டியிடும். ராஷ்ட்ரிய ஜனதாதளம் 144 இடங்களில் போட்டியிடும். வால்மீகி நகர் லோக்சபா  தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் போட்டியிடும். இந்த தேர்தல், மக்களுக்கும், எந்திரத்தனமான இரட்டை அரசாங்கத்திற்கும் இடையிலான சண்டை என்று கூறினார்.