பீகார் மாநிலத்தில் சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்ற தேர்தலில், மிகச்சிறிய வாக்கு சதவிகித வித்தியாசத்தில் ஆட்சியை கோட்டைவிட்டது லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி தலைமை வகித்த ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி.

கடந்த 1989ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி பிறந்தவர் தேஜஸ்வி. இவர் பிறந்த அடுத்த ஆண்டிலேயே, முதன்முறையாக பீகார் முதல்வராக அமர்ந்தார் தந்தை லாலு பிரசாத். அந்தவகையில், அதிர்ஷ்டக்கார பிள்ளையாகிப் போனார் தேஜஸ்வி.

எனவேதான், தனது மூத்த மகன் தேஜ்பிரதாப் இருக்க, இளைய மகனையே அரசியல் வாரிசாக முன்னிறுத்தினார் லாலு பிரசாத் என்று ஒரு கருத்து உண்டு.

தற்போது, லாலு பிரசாத் சிறையில் இருக்கும் நிலையில், தேஜஸ்வி, பீகார் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு, கூட்டணியாக போட்டியிட்டது ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி.

வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும், ஆர்ஜேடி கூட்டணிக்குத்தான் பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறின. இதனால், லாலுவின் குடும்பம் உற்சாகமடைந்தது.

நவம்பர் 9ம் தேதி தேஜஸ்விக்கு 31 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், நவம்பர் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இந்நிலையில், “அரியணைதான் உனக்கான பிறந்தநாள் பரிசு” என்று தேஜ்பிரதாப்பும் கூட பதிவிட்டிருந்தார்.

லாலு பிரசாத் குடும்பத்தின் உறவினர்களும், மாநிலம் முழுவதிலுமிருந்து தேஜஸ்வியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பாட்னா வந்துவிட்டனர். ஆனால், சிராக் பஸ்வான் பகடைக்காயாக செயல்பட்டது, ஓவைசியின் கட்சி தேவையில்லாமல் தனித்து நின்று குட்டையைக் குழப்பியது உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், மிக மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் பதவியை இழந்தார் தேஜஸ்வி யாதவ்.

இதனால், அவரின் 32வது பிறந்தாண்டிற்கு பரிசாக, பீகார் அரியணை கிடைக்கும் என்று மகிழ்ந்திருந்த தேஜஸ்வியின் உறவுகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது!