பாட்னா: விரைவில் நடைபெறவுள்ள பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, அம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதளம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆர்ஜேடி கட்சியின் முக்கிய தலைவரும், அம்மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவருமான தேஜ்ஸ்வி யாதவ் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். எதிர்க்கட்சி கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அவரே அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே நிதிஷ் அமைச்சரவையில் துணை முதல்வராக பதவி வகித்தவர்.
“இது வெறும் தேர்தல் அறிக்கையல்ல; வாக்குறுதியாகும். இது மாற்றத்திற்கான வாக்குறுதியாகும். பீகார் மாநிலத்தை ஒளிமயமானதாக மாற்றுவதற்கான அனைத்து விஷயங்களுடனும் தொடர்புடையது இந்த வாக்குறுதி” என்றார் தேஜஸ்வி யாதவ்.
மாநிலத்தில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை, அனைத்தும் அரசு வேலைகளாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“பீகார் அரசால் 4 லட்சம் வேலைவாய்ப்புகளை எளிதாக வழங்க முடியும். இந்த மாநிலத்தின் பட்ஜெட் தொகை ரூ.2.13 லட்சம் கோடிகள். ஆனால், அதில் வெறும் 60% மட்டுமே செலவு செய்யப்படுகிறது. நிதிஷ்குமார் அரசால் மீதமுள்ள 40% தொகை செலவுசெய்ய முடியவில்லை. அதன் மதிப்பு ரூ.80000 கோடியாகும்” என்று அவர் மேலும் கூறினார்.