கணவன் கண் முன்னே மனைவி மகள் கூட்டு பலாத்காரம் : பீகாரில் அக்கிரமம்

சோந்திகா, பீகார்

பீகார் மாநிலம் கோன்ச் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ளது சோந்திகா என்னும் கிராமம்.  இந்த கிராமத்தில் கடந்த புதன்கிழமை இரவு சுமார் 8 மணி அளவில் ஒரு டாக்டர் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.   அப்போது சுமார் 20 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழி மறித்து அருகில் உள்ள வயல் வெளிக்கு மூவரையும் இழுத்துச் சென்றுள்ளனர்.

அங்கிருந்த மரம் ஒன்றில் டாக்டரை கட்டிப் போட்ட கும்பல் அவர் மனைவி மற்றும் மகளிடம் பாலியல் சேட்டை செய்துள்ளனர்.   டாக்டரின் மனைவி தங்களிடம் உள்ள நகை, பணம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தங்களை விட்டு விடுமாறு கெஞ்சி உள்ளார்.   ஆனால் அந்த கும்பல் அவர்களிடம் இருந்த பொருட்களை பிடுங்கிக் கொண்டதுடன் தாய் மகள் இருவரையும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்த பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “தங்களை தாங்களே தேசியவாதிகள் என சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகள் தற்போது தூங்கி விட்டனர் போலும்.  கூட்டு பலாத்காரமும் மைனர் பெண்களை கடத்திச் செல்வதும் மாநிலத்தில் அதிகரிஹ்து வருகிறது.  இனி மாநிலத்தை பீகார் மாநிலம் என்பதற்கு பதில் பலாத்கார மாநிலம் என அழைக்கலாம்” என பதிந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பாட்னா காவல்துறை சூப்பிரண்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.