நிதீஷ்குமாரின் தாமத நலம் விசாரிப்பு : லாலு மகன் விமர்சனம்

பாட்னா

பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் உடல் நலம் குறித்து தாமதமாக விசாரித்ததற்கு லாலுவின் மகன் தேஜஸ்வி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவின ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ளார்.   அவர் சிறையில் இருந்த போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அதன் பிறகு  மூத்த மகன் திருமணத்துக்கு வந்து விட்டு மீண்டும் சிறை சென்றார்.    லாலுவுக்கு உடல்நலக் குறைவு காரணமாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.    கடந்த ஞாயிறு அன்று பீகாரின் முதல்வர் நிதீஷ் குமார் லாலுவின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

இதற்கு லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி மிகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர், “மும்பையில் அறுவை சிகிச்சை நடந்த எனது தந்தையின் உடல் நலம் குறித்து டில்லியில் உள்ள அமைச்சர்களும் விசாரித்து விட்டனர்.  ஆனால் எங்கள் சொந்த மாநில முதல்வருக்கு நான்கு மாதங்கள் கழித்து இப்போது தான் அறுவை சிகிச்சை நடந்ததே தெரிந்துள்ளது.

ஒரு மாநில முதல்வருக்கு தனது மாநிலத்தின் முன்னாள் முதல்வருக்கு அறுவை சிகிச்சை நடந்ததை அறிந்துக் கொள்ள நான்கு மாதங்கள் தேவைப்படுகிறது.    எனக்கு தெரிந்து என் தந்தையை இதுவரை நலம் விசாரித்த அரசியல் தலைவர்களில் இவர் தான் கடைசியாக இருப்பார் என நினைக்கிறேன்”  என டிவிட்டரில் பதிந்துள்ளார்.