ராஞ்சி

க்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது தந்தை லாலுவை மருத்துவமனையில் சந்தித்துள்ளார்.

பீகார் மாநில முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் உள்ளார். சிறையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை அவருடைய உறவினர்கள் காணவும் கடும் கெடுபிடி விதிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் அவருடைய கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் இரு மாநிலங்களில் போட்டியிட்டது/

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தான் போட்டியிட்ட பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. அதற்குப் பிறகு அக்கட்சியின் தலைவரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் காணப்படவில்லை. அவர் எங்கு சென்றுள்ளார் என்பதைக் குறித்து பல ஊகங்கள் எழுந்தன. அதன் பிறகு நேற்று அவர் திரும்பி வந்துள்ளார்.

தேஜஸ்வி யாதவ் விமான நிலையத்திலிருந்து நேரடியாக தனது தந்தை லாலு பிரசாத் யாதவை மருத்துவமனையில் சந்தித்துள்ளார். தேர்தல் தோல்விக்குப் பிறகு தேஜஸ்வி யாதவ் தனது தந்தையை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். தற்போது தேஜஸ்வியின் சகோதரர் தேஜ்பிரதாப் தனது மனைவி ஐஸ்வர்யா ராய் என்பவரை விவாகரத்து செய்ய உள்ளார். மருத்துவ மனையில் தேஜஸ்வி தனது தந்தையுடன் தேர்தல் நிலை குறித்தும் சகோதரர் விவாகரத்து குறித்தும் பேசி உள்ளார்.

தேஜஸ்வி யாதவுடன் அவர் கட்சி மூத்த தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் சென்றுள்ளார். லாலுவை சந்தித்த பிறகு ரகுவன்ஷ், “லாலுவின் உடல் நிலை நன்கு முன்னேறி வருகிறது. அவர் இரத்த அழுத்தம் சீராக உள்ளது. நாங்கள் எங்கள் சட்டப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தி அவரை ஜாமீனில் கொண்டு வருவோம். அவர் பாஜகவையும் பீகாரின் மோசமான ஆட்சியையும் எதிர்த்துப் போராட விரும்புகிறார்.

அவர் ஆணைப்படி நாங்கள் பீகார் மாநிலத்தில் கட்சியைப் பலப்படுத்த எண்ணி உள்ளோம். அத்துடன் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் இணந்து போட்டியிட்டு மாபெரும் வெற்றி அடைய உள்ளோம். லாலு பிரசாத் யாதவை சந்திக்க வருபவர்களிடம் சிறை விதிகள் பின்பற்றப்படுவதில்லை. அவரை பார்க்க 5 பேர் வரை விதிகளின்படி அனுமதிக்க வேண்டும். ஆனால் அவரை பார்க்கப் பலரை அனுமதிக்காமல் உள்ளதால் குழப்பம் நேரிடுகிறது” என தெரிவித்துள்ளார்.