ஐதராபாத்:

எருமை மாடுகளை வாங்கும் விவசாயிகளுக்கு 50 முதல் 75 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘ பால் சொசைட்டிகள் மூலம் எருமை மாடுகள் வாங்கும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 75 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும். அதோடு பால் வளத்துறையை மேம்படுத்தும் வகையில் ‘‘ பால் புரட்சி’’ திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

விஜயா, முல்கனூர், நல்கொண்டா, ரங்கா ரெட்டி மாவட்டங்களில் பால் சொசைட்டி உறுப்பினர்களுடன் நட ந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சொசைட்டி உறுப்பினர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஊக்கத் தொகையாக ஒரு லிட்டருக்கு ரூ. 4 வழங்க வேண்டும் என்று கோரிக்கையையும் முதல்வர் ஏற்றுக் கொண்டார். ‘‘இது செப்டம்பர் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். கர்நாடகா, ஆந்திரா, குஜராத் மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இங்கு குறைவான அளவிலேயே பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் இந்த திட்டம் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது’’ என்று முதல்வர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் 8 ஆயிரம் பேர் கலந்தகொண்டனர். முதல்வர் மேலும் பேசுகையில், ‘‘ 60 ஆண்டுகால போராட்டத்திற்கு பின் தெலங்கானா மாநிலம் கிடைத்துள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திராவில் தெலங்கானா பகுதிகள் எவ்வித வளர்ச்சியும் பெறாமல் பாதித்துள்ளது. பால் விவசாயிகளை மேம்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இந்த வகையில் யாதவர் மற்றும் குருமா இன மக்களுக்கு ரூ. 4 ஆயிரம் கோடியில் ஆடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நில உரிமை தொடர்பான நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காண அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இதன் பின் அரசின் பயன்கள் முறைகேடு இல்லாமல் உரிய விவசாயிகளுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.