சந்திரசேகர ராவ் தனக்காக மட்டுமே பாடுபடுகிறார்: தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தில் சோனியா அதிரடி குற்றச்சாட்டு

ஐதராபாத்:

தெலுங்கானா முதல்வர்  சந்திரசேகர் ராவ் தனக்காகவும், தனது குடும்பத்தினருக்காக மட்டுமே செயல்படுகிறார் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக சாடினார்.

தெலுங்கானா மாநிலத்தில் டிசம்பர் 7ந்தேதி சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள டிஆர்எஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அங்கு 5 முனை போட்டி நிலவி வருகிறது.

ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க நேற்று மாலை தெலுங்கானா மாநிலத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆகியோர் வருகை தந்தனர்.

மேட்கல் தொகுதியில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சோனியா காந்தி, முதல்வர் சந்திரசேக ராவை கடுமையாக  தாக்கி பேசினார்.

தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியது காங்கிரஸ்தான் என்று கூறிய சோனியா, ஆனால் துரதிர்ஷ்டவசமாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக ஆட்சி செய்து வருகிறார் என்று கூறினார்.

முதல்வர் சந்திரசேகர ராவ்  அவருக்காகவும், அவரது நெருங்கிய உறவினர்களுக்காகவும் மட்டுமே ஆட்சி செய்து வருவதாக குற்றம் சாட்டியவர், சந்திரசேகர ராவ் ஆட்சியில் எந்த வளர்ச்சி பணி களும் நடைபெறவில்லை என்றும், மாநில அரசு  தலித்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் மாணவர்கள் மீது உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் கடுமையாக சாடினார்.

சோனியாவை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கானா மாநிலத்தில் டி.ஆர்.எஸ். கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரவுள்ளது என்று கூறினார்.

You may have missed