தெலுங்கானாவில் பயங்கரம்: பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து! 10 பேர் பலி

கஷிபுக்கா:

தெலுங்கானா மாநிலத்தில் கஷிபுக்கா பகுதியில் செயல்பட்டு வந்த  பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சிக்கி 10 பேர் பலியானதாகவும், பலர் தீக்காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள  கஷிபுக்கா பகுதியில், இமாமுலா மார்க்கெட் சாலை  பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த  தொழிற்சாலையில் 15க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று முற்பகல் எதிர்பாராதவிதமான  திடீரென பட்டாசு ஆலையில் தீ பிடித்தது.  இதன் காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அங்கு வேலை பார்த்து வந்தவர்கள் தீயில்  சிக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து, தீயில் சிக்கியவர்களை காப்பாற்றினர்.

இந்த கோர விபத்தில் பல பெண்கள், ஒரு சிறுவன் உள்பட 10 பேர் உடல் கருகி இறந்துள்ளதாக வும், மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில்  மின்கசிவு காரணமாக தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டிருப்ப தாகவும், இதுகுறித்து தொழிற்சாலையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தாகவும் காவல்துறையினர் தெரிவித்துஉள்ளனர்.