ஐதராபாத்தில் இருக்கும் பாகிஸ்தானியர்களை விரட்ட ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ பா.ஜ.க. தலைவர் சர்ச்சை கருத்து..

 

ஐதராபாத் :

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சிக்கு வரும் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதனை யொட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்த பா.ஜ.க. தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அந்த மாநில பா.ஜ.க. தலைவரும், எம்.பி.யுமான பந்தி சஞ்சய் குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் “தெலுங்கானாவில் அண்மையில் ‘துப்பக்’ சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சி தோற்று விட்டதால், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் ஒவைசியுடன் இணைந்து, டி.ஆர்.எஸ். கட்சி, ஐதராபாத் தேர்தலில் வெல்ல புதிய திட்டத்தை தீட்டியுள்ளது” என குற்றம் சாட்டினார்.

“ஐதராபாத்தில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை ஓட்டுப்போட வைக்க திட்டமிட்டுள்ளனர்” என குறிப்பிட்ட சஞ்சய் குமார் “ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், ஐதராபாத்தில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்ற ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ நடத்தப்படும்” என்று ஆவேசமாக தெரிவித்தார்.

அவரது பேச்சுக்கு தெலுங்கானாவில் உள்ள பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஐதராபாத்தில் நடந்த ஏ.ஐ.எம்.ஐ.எம். பிரச்சார கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் அசாதுதீன் ஒவைசி “ஐதராபாத்தில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை. இந்திய குடிமக்கள் தான் உள்ளனர்” என குறிப்பிட்டார்.

“ஐதராபாத் மீது ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ நடத்தப்போவதாக பா,ஜ.க, தெரிவித்துள்ளது. நான் கேட்கிறேன். லடாக்கில் நமது இந்திய நிலைகளை சீன ராணுவம் ஆக்ரமித்துள்ளது. எனவே சீன ராணுவம் மீது ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ நடத்த பிரதமர் மோடி தயாரா?” என ஒவைசி கேள்வி எழுப்பினார்.

– பா. பாரதி