ஐதராபாத்:

தெலுங்கானா போனலு திருவிழாவில் ஆடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளரை பிடித்து இழுத்து, அவரது உதட்டில் முத்தமிட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நமது மாநிலத்தில் ஆடி மாதம் அம்மனுக்கு விஷேச பூசைகள் செய்து கொண்டாடுவது போல, தெலுங்கானாவிலும் காளியை கொண்டாடும்  போனலு திருவிழா ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம்.  இந்த விழா, ஐதராபாத் மற்றும் செகந்தராபாத்தில் உள்பட தெலுங்கானாவின் பிறபகுதிகளில் கொண்டாடப்பட்டது.

இத்திருவிழா போனலு என்ற தேவி மஹாகாளி கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பெண்கள் பொங்கல் மற்றும் இனிப்பு வகைகள் ஆகியவற்றை செய்து மஹாகாளி அம்மனுக்கு படைத்தனர். இந்த திருவிழாவின்போது,.  ஏராளமான பெண்களும் ஆண்களும் ஆட்டம் பாட்டத்துடன்  விழாவை விமரிசையாக கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஒரு பகுதியில் சில இளைஞர்கள் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது ஆடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  சப் இன்ஸ்பெக்டர் மகேந்திராவை  இழுத்துப் பிடித்து, அவரது உதட்டில், நச்சென்று முத்தம் ஒன்றைக் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டருக்கு ‘இச்’ கொடுக்கும் காட்சி

இதை கண்ட அனைவரும் ஒரு விநாடி ஷாக்கி நிற்க,  இதை சற்றும் எதிர்பார்க்காத சப் இன்ஸ்பெக்டர் அந்த இளைஞருக்கு  ஓங்கி ஒரு அறை விட்டு, தள்ளினார்.  அதைத்தொடர்ந்து, அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், போதையின் மயக்கத்தில் ஆடிய அந்த இளைஞர் பெயர்   பானு என்பதும் , போதை தலைக்கேறிய நிலையில், சப்இன்ஸ்பெக்டர்  உதட்டில் முத்தமிட்டதாகவும் கூறப்படுகிறது. பானு,  தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தற்போது,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.