துர்க்கைக்கு வைர மூக்குத்தி: தெலுங்கானா முதல்வர் காணிக்கை

விஜவாடா:

தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி  பெற்ற கனகதுர்கா கோவிலில் வீற்றிருக்கும் அம்பாள் கனகதுர்க்கைக்கு வைர மூக்குத்தி காணிக்கையாக தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் செலுத்தி நன்றிக்கடன் செலுத்தி உள்ளார். நேர்த்தி கடனாக ரூ.1.37 கோடி மதிப்புள்ள வைர மூக்குத்தியை அவர் வழங்கி உள்ளார்.

ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று சந்திரசேகரராவ் தலைமை யிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தது. அவரது கோரிக்கை கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு, தனி மாநிலம் அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற தெலுங்கானா மாநில சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திரசேகர ராவ் மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

ஏற்கனவே,  தனி தெலங்கானா மாநிலம் அமைந்தால், பல்வேறு கோயில்களுக்கு தனது குடும்பத்தினருடன் நேரில் வந்து நேர்த்திக் கடன் செலுத்துவதாக ஏற்கனவே சந்திரசேகரராவ் வேண்டுதல் செய்திருந்த நிலையில், தற்போது அந்த வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார்.

அதன்படி, விஜயவாடாவில் உள்ள பிரசித்திபெற்ற கனகதுர்கை அம்மன் கோவிலுக்கு  நேர்த்திக் கடனாக,  ரூ.1.37 கோடி மதிப்புள்ள வைர மூக்குத்தியை காணிக்கையாக வழங்கி உள்ளார். 11.290 கிராம் எடை கொண்ட இந்த வைர மூக்குத்தியில் 57  விலை உயர்ந்த வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இதுபேலவே  திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5.5 கோடி மதிப்பிலும் சாலிக்கிராம ஹாரத்தை சந்திரசேகர ராவ் கடந்த ஆண்டு காணிக்கையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.