தெலங்கானா சட்டமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்….சந்திரசேகர ராவ் சூசகம்

ஐதராபாத்:

தெலங்கானா சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்&மே மாதத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடக்கவுள்ளது. இந்நிலையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. 2 மணி நேரம் வரை நீடித்த இந்த கூட்டத்தில் கட்சியின் எம்.பி., எம்எல்ஏ.க்கள், மேல்சபை எம்.பி.க்கள் கலந்தகொண்டனர்.

    

சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களின் கருத்துக்களை முதல்வர் சந்திரசேகர ராவ் கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசுகையில்,‘‘சட்டமன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம். இது குறித்த தகவலை நான் தெரிவிப்பேன். தேர்தலை சந்திக்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும்’’ என்று பேசியுள்ளார்.

3 நாள் பயணமாக சந்திரசேகர ராவ் டில்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து ரூ.450 கோடி மதிப்பிலான வளர்ச்சி நிதியை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தவுள்ளார். இந்த நிதி கிடைக்கப்பபெற்றால் பல நலத்திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்த முடியும். இந்த வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே சந்தித்துவிடலாம் என்று சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார்.

வரும் செப்டம்பர் 2ம் தேதி கொங்கரா கலன் பகுதியில் கட்சியின் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தனது பலத்தை நிரூபிக்கவும், நான்கரை ஆண்டு கால ஆட்சியின் அறிக்கையை மக்களுக்கு அளிக்கவும் சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார்.

119 இடங்களை கொண்ட தெலங்கானா சட்டமன்றத்தில் இக்கட்சி 63 எம்எல்ஏ.க்களை கொண்டுள்ளது. எதிர்கட்சியில் உள்ள சில எம்எல்ஏ.க்களின் ஆதரவுடன் இக்கட்சியின் பலம் 76 என்ற நிலையில் உள்ளது. செப்டம்பர் 2ம் தேதி நடக்கும் பொதுக் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.