தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ. 2000 த்துடன் 25 கிலோ அரிசி நிவாரணம் தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு

 

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ள நிலையில், தனியார் பள்ளி கல்லூரிகளில் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பலரும் சம்பள இழப்பை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளதை உணர்ந்த தெலுங்கானா அரசு, இவர்களுக்கு மாதம் ரூ. 2000 த்துடன் 25 கிலோ அரிசியை நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 2021 முதல் பள்ளிகள் திறக்கப்படும் வரை இந்த உதவி பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள அரசு, இந்த உதவிகளை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது.

உதவி தொகை பெறுபவர்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கான அரிசி பொது விநியோக திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் இந்த அறிவிப்பால் அரசு உதவிபெறும் தனியார் கல்வி நிலையங்களில் வேலை செய்யும் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது