Random image

சட்டசபை முன்கூட்டியே கலைப்பா? இன்று பிற்பகல் ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் சந்திரசேகரராவ்

ஐதராபாத்:

முன்கூட்டியே தேர்தலை  சந்திக்க விரும்பும் தெலங்கான மாநில முதல்வர் சந்திரசேகரராவ், சட்டமன்றத்தை கலைக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஆலோசனை நடத்த இன்று  1 மணி தெலங்கானா மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து பிற்பகல் 1.30 மணி அளவில் மாநில ஆளுநரை சந்திக்கிறார். அப்போது, தெலங்கானா மாநில சட்டமன்றத்தை கலைக்கும் வகையில் அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த விரும்புகிறார். அப்போதுதான் சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்த முடியும் என்றும், வெற்றி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள  முடியும் என்றும் கருதி, சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டு, மறு தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரசேகரராவ், ஆட்சியைக் கலைப்பதாக இருந்தால் தொண்டர்களிடம் முன்கூட்டியே தெரிவிப்பேன் என கூறியிருந்த நிலையில்  இன்று  ஆட்சி கலைப்பு குறித்து அறிவிப்பார் என தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு கேபினட் மீட்டிங் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து கவர்னரை சந்திக்க 1.30 மணி அளவில் அனுமதி வாங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கவர்னரை சந்திக்கும்போது மாநில சட்டமன்ற கூட்டத்தை வரும் 10ந்தேதி வரை கூட்ட அனுமதி கோரலாம் அல்லது அமைச்சரவை ராஜினாமா முடிவை தெரிவிக்கலாம் என்றும் தகவல்கள் பரவி வருகிறது.

முன்கூட்டியே தேர்தல் நடத்தும் வகையில், ஏற்கனவே தெலங்கானா அமைச்சர்கள் அவர்களுக்கு கீழ் உள்ள மாவட்டங்களின் எம்எல்ஏக்களிடம், தொகுதி வளர்ச்சி நிதிக்கு விண்ணப்பிக்கும்படி  கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.