‘நவம்பரில் தெலுங்கானா தேர்தல்?’ முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்புக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று மாநில காபந்து முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார். இதற்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று  முதல்வராக சந்திரசேகர் ராவ் பொறுப்பேற்றார். சட்டமன்ற பேரவையில் ஆயுட்காலம் அடுத்த வரும் தொடக்கத்தில் முடிவடைய உள்ள நிலையில், முன்கூட்டியே தேர்தலை சந்திக்கும் எண்ணத்தில்  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தனது அமைச்சரவையை ராஜினாமா செய்து சட்டசபையை கலைக்குமாறும் மாநில கவர்னர் நரசிம்மனை சந்தித்து பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து சட்டசபையை கலைத்த ஆளுனர் நரசிம்மன் காபந்து அரசாக நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார் தெலுங்கானா சட்டப்பேரவை கலைக்கப்பட்டதால் அம்மாநில தேர்தல் குறித்து மத்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, டிசம்பரில் நடைபெறும் 4 மாநில தேர்தலுடன் தெலுங்கானா மாநில தேர்தலையும் நடத்துவது குறித்து இன்னும் தேர்தல் ஆணையம் முடிவு செய்யவில்லை. மாநில தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை செய்த பின்னரே தெலுங்கானா மாநில தேர்தல் குறித்து முடிவு செய்யப்படும் என  தேர்தல் ஆணையர் ஒபி ராவத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தெலுங்கானாவில் நவம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.  மாநில அதிகாரிகளுடன் தேர்தல் அதிகாரி நடத்திய ஆலோசனையை தொடர்ந்து முதல்வர் தெரிவித்தாக கூறப்படுகிறது.

முதல்வர் சந்திரசேகர ராவின் அறிவிப்புக்கு மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தெலுங்கான மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து வெளியான செய்தி தவறு என்று  மறுத்துள்ளார்.

சந்திரசேகர ராவ் எந்த நம்பிக்கையில் இவ்வாறு கூறினார் அவர் மீது வழக்கு பதியப்படுமா? என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.