Random image

” தெலுங்கானா தேர்தல் களத்தில் நட்சத்திர பேச்சாளராக விஜயசாந்தி பிரச்சாரம் செய்வார் ”- ராகுல்காந்தி

தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக நடிகை விஜயசாந்தி பிரச்சாரம் செய்வார் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

vijayasanti

தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வந்தது. முன்கூட்டியே தேர்தலை சந்திக்கும் வகையில் சமீபத்தில் சட்டசபையை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் கலைத்தார். இதனால் தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

தெலுங்கானாவில் இப்போது தேர்தல் நடந்தால் சந்திரசேகரராவ் அமோக வெற்றி பெறுவார் என்று வந்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் என்று தெரிகிறது.

ஒருபுறம் காங்கிரஸ் கட்சியும் தெலுங்கானா தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா காங்கிரசாரை உற்சாகப்படுத்தும் வகையில் புதிய கமிட்டிகளை உருவாக்கி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.

தேர்தலுக்காக 10 குழுக்களை உருவாக்கி, பிரசார கமிட்டி தலைவராக மல்லுப்பட்டி விக்ரமர்காவை நியமித்து ராகுல்காந்தி அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொறுப்பை முன்னாள் துணை முதல்-மந்திரி ராஜ நரசிம்மாவிடம் ராகுல் ஒப்படைத்துள்ளார்.

தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பு குழுவில் மொத்தம் 50 தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். யார்-யார் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற பட்டியலையும் ராகுல் அறிவித்துள்ளார். அதில் நடிகை விஜயசாந்திக்கு பிரசாரத்தில் முக்கியத்துவம் அளிக்க ராகுல் உத்தரவிட்டுள்ளார். விஜயசாந்தி தெலுங்கானா பிரசார களத்தில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்துடன் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று ராகுல் அறிவித்துள்ளார்.