ஐதராபாத்:

மாணவர்கள் தங்கிப் படிக்கும் உறைவிடப் பள்ளிகளில், மாணவர்களே ஆசிரியர்களாக மாறி பாடம் நடத்தும் திட்டம் தெலங்கானாவில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.


தலித் மாணவர்களுக்கான உறைவிடப் பள்ளிகள்  அரசின் சொஸைட்டி மூலம் நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக மாணவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தாலும், ஆசிரியர்கள் பற்றாக்குறையை சரிகட்டவும், மாணவர்ளும் கற்பிக்கும் திறனை அதிகரிக்கவும் இது வழி ஏற்படுத்தும் என அரசு தரப்பில் கூறுகின்றனர்.

தெலங்கானா சமூக நலத்துறையின் உறைவிட கல்வி நிறுவன சொசைட்டியின் செயலாளர் ஆர்.எஸ்.பிரவீன் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சொசைட்டியின் கீழ் இயங்கும் இந்த பள்ளியின் சோதனை அடிப்படையில், 5 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாணவர்களே ஆசிரியர்களாகி பாடம் நடத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கு ‘பசுமை குரு’ என பெயரிடப்பட்டுள்ளது. 6 வகுப்பு வரை இளம் மாணவ ஆசிரியர்களும், 9 வகுப்பிலிருந்து மூத்த மாணவ ஆசிரியர்களும் பாடம் நடத்துவர்.

இந்த மாணவ ஆசிரியர்கள் கேள்வித் தாள்களையும் தயாரிப்பர். இதுபோன்ற முறை இந்தியாவிலேயே இங்குதான் முதல் முறை தொடங்கப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டிலிருந்து இது நடைமுறைக்கு வரும். இந்த மாணவ ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கண்காணிப்பிலேயே இருப்பர். மாணவ ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ.3,500 வழங்கப்படும்.

இந்த பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு ஒர் ஆசிரியர் என்ற நிர்ணயிக்கப்படும். சொசைட்டி நடத்தும் மற்ற பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒர் ஆசிரியர் உள்ளனர்.

ஆரம்பத்தில் இந்த திட்டம் 320 மாணவ ஆசிரியர்கள், 9 ஆசிரியர்கள் மற்றும் ஒரு பள்ளி முதல்வரை வைத்து தொடங்கப்படும்.

கற்பிக்கும் திறமையின் அடிப்படையில் மாணவ ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு மாதந்தோறும் ஒரு வாரம் பயிற்சி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.