தெலுங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவுக்கு கொரோனா பாதிப்பு: தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை

ஐதராபாத்: தெலுங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றுகள் ஓயவில்லை. வரலாறு காணாத அளவாக ஒட்டு மொத்த பாதிப்பு 40 லட்சத்தை கடந்து அதிர்ச்சியை தந்திருக்கிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வேகம் குறையவில்லை. குறிப்பாக மகாராஷ்டிராவில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிலும் வர்த்தக நகரான மும்பையில் கடந்த 2 வாரங்களில் 20 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி உள்ளது.

சாதாரண மக்களை மட்டுமல்லாது ஆளுநர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அரசியல் பிரமுகர்களையும் கொரோனா தாக்கி வருகிறது. இந் நிலையில் தெலுங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். கொரோனா அறிகுறிகள் இருப்பதால் பரிசோதனை செய்தேன். அதில், கொரோனா தொற்று உள்ளதாக முடிவுகள் வந்து இருக்கின்றன. ஆனாலும் எனது உடல்நிலை நன்றாக இருக்கிறது.

என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா சோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார். தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மருமகன் ஹரிஷ் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.