ஐதராபாத்: கோவிட்-19 பரவலை கையாள்வதில், தெலுங்கானா மாநில அரசின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதால், தெலுங்கானா மக்கள் எளிதான தொற்றுக்கு ஆளாகும் நிலையில் வாழ்கிறார்கள் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்தவகையில், அம்மாநிலம் 3வது மோசமான நிலையில் உள்ளது.
இந்தியாவில் எந்தப் பகுதி, எளிதான கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நிலையில் உள்ளது என்ற அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது, ஒரு இடத்தின் மக்கள்தொகை, உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதாவது, பிராந்திய தொற்று வாய்ப்பு, சமூகப் பொருளாதார தொற்று வாய்ப்பு, மக்கள்தொகை தொற்று வாய்ப்பு, அப்பகுதியின் சுகாதார நிலைமைகள், அப்பகுதியின் சுகாதார கட்டமைப்புகள், தொற்றுநோய் தொடர்பான சூழல்கள் போன்றவை கணக்கில் எடுக்கப்பட்டன.
தெலுங்கானா மாநில நிர்வாகத்தைப் பொறுத்தவரை, கொரோனா தொற்றைக் கையாளும் முறை மிகவும் மோசமாக இருப்பதாக தொடர்ந்த புகார்கள் எழுகின்றன. அங்கு பரிசோதனை எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அம்மாநில உயர்நீதிமன்றம் மற்றும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்டவற்றின் தொடர் நெருக்குதல்கள் காரணமாக, தற்போது அங்கு பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்படியும், ஒருநாளைக்கு சில நூறு சாம்பிள்கள் மட்டுமே எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.