தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது

ஐதராபாத்: தெலுங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ நோமுலா நரசிம்மய்யா திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 64.

தெலுங்கானாவின் நாகர்ஜுனா சாகா தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் நோமுலா நரசிம்மய்யா. ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். தெலுங்கானாவில் உள்ள நக்ரேகல் மண்டல் நல்கொண்டா மாவட்டத்தின் பலேம் கிராமத்தில் பிறந்தவர் நோமுலா நரசிம்மய்யா.

தமது இளமைப் பருவத்தில் தெலுங்கானா ஆயுதப் போராட்டம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர். அவரது மறைவுக்கு முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இரங்கல் தெரிவித்து உள்ளார். மக்களுக்கான தலைவர் என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறி உள்ளார்.