சிஏஏவுக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு?

ஐதராபாத்:

த்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடுமையான எதிர்ர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதை எதிர்த்து மாநில சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சில மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா மாநில சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதுபோல நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகளும் போர்க்கொடி தூக்கி உள்ளன. தமிழகம், கேரளம், டெல்லி உள்பட பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையடத்து, சிஏஏ சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் முதன்முதலாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து,  காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் மாநிலங்களான  ராஜஸ்தான், மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும்  சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

இந்த வரிசையில் தெலுங்கானா மாநிலமும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்  “குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இருக்கும் மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தப்படும். சட்டப்பேரவையிலும் சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என கூறியிருந்தார்.

இந்த நிலையில்  நேற்று நடைபெற்ற முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும்,  குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்படும் என்றும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தெலுங்கானா மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சட்டத்தின் முன் அனைத்து மதங்களும் சமம். கடந்த ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும். அரசியலமைப்பு வலியுறுத்தியுள்ள மதச் சார்பின்மைக்கு மாறாக மதத்தை முன்நிறுத்தி குடியுரிமை வழங்கப்படுவது கூடாது என்றும், மத்திய அரசிடம் தெலங்கானா அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.