டில்லி

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கோரிய சரி செய்யப்பட்ட வருட வருமானத்தில் ரூ.92000 கோடியை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட சதவிகிதத்தை அரசுக்கு அனுமதி கட்டணமாகச் செலுத்த வேண்டும்.  அவ்வகையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.21682 கோடி, வோடபோன் ரூ.19823 கோடி, ரிலையன்ஸ் ரூ.16456 கோடி, பி எஸ் என் எல் ரூ.3028 கோடி மாற்றும் எம் டி என் எல் ரூ.2537 கோடி நிலுவையில் உள்ளதாக அரசு அறிவித்தது.

இது சரி செய்யப்பட்ட வருட வருமானத்தில் வராது என்பதால் இதை நீக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.   சுமார் 14 ஆண்டுகளாக நடைபெறும் இந்த வழக்கில் அரசு அளித்திருந்த அறிக்கையில் மொத்தக் கட்டண நிலுவை ரூ.92641 கோடி அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.   அதன்படி சரிசெய்யப்பட்ட வருட வருமானத்தில் இந்த தொகை வரும் எனவும் அதனால் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை அபராதம் மற்றும் வட்டியுடன் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.   இது பல தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்து ஏர்டெல் நிறுவனம் இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகக் கூறி உள்ளது.  அந்நிறுவனம் அளித்த அறிக்கையில், “தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கோடிக் கணக்கில் சேவை மேம்பாட்டுக்காகவும் வாடிக்கையாளர்களுக்குத் தரமான சேவை செய்யவும் செலவழித்து வருகிறோம்.  தற்போது இந்தத் துறை கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது.  இந்நிலையில் இந்த தீர்ப்பு இந்த துறையை மேலும் பலவீனம் அடையச் செய்யும்” எனத் தெரிவித்துள்ளது.

மேலும் அரசு தெரிவித்துள்ள 16 தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களில் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைந்துள்ளன என்பதும் ரிலையன்ஸ், ஏர்செல், டெலினார், விடியோகோன், எஸ்எஸ்டிஎல், டாடா மற்றும் லூப் டெலிகாம் நிறுவனங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.