காவல்துறை வாகனத்தின் மேல் அமர்ந்து டிக் டாக் வீடியோ : அமைச்சர் பேரனின் அட்டூழியம்

--

தராபாத்

தெலுங்கானா அமைச்சர் மகமூது அலியின் பேரன் ஃபர்கன் அகமது காவல்துறை வாகனத்தின் மீது அமர்ந்துள்ள டிக்டாக் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சராக முகமது மகமூது அலி பதவி வகித்து வருகிறார்.   இவர் உள்துறை அமைச்சர் என்பதால் இவருக்கு காவல்துறை வாகனம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.   பொதுவாக காவல்துறை வாகனங்கள் அனைத்தும் காவல்துறைத் தலைவர் பெயரில் பதிவு செய்யப்படுவது வழக்கமாகும்.  இந்த வாகனமும் அவ்வாறு பதியப்பட்டுள்ளது.

மகமூது அலியின் பேரனான ஃபர்கன் அகமது என்பவர் சமீபத்தில் டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.   அதில் ஃபர்கன் அகமது இந்த வாகனத்தின் முன் பகுதியின் மேல் ஒரு நண்பருடன் அமர்ந்துள்ளார்.   அத்துடன் ஒரு திரைப்பட வசனத்துக்கு அவர் வாய் அசைக்கிறார்.  அந்த வசனத்தில் ஒரு அரசியல்வாதி காவல்துறை அதிகாரியை மிரட்டுவது போல் அமைந்துள்ளதாகும்.

இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வைரலாகி உள்ளது.   இது குறித்து பலர் இது அதிகார மீறல் எனவும் அமைச்சரின் பேரனின் அட்டூழியம் எனவும் விமர்சித்துள்ளனர்.   இது குறித்து அமைச்சர் மகமூது அலி தனது  பேரன் சும்மா அந்த வாகனத்தின் மீது அமர்ந்துள்ள போது ஒரு சிலர் வீடியோ எடுத்துள்ளதாகவும் இது குறித்து விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.