‍ஊரடங்கால் அவதியுறும் நோயாளிகளுக்காக டெலிமெடிசின் கிளினிக் திட்டம்!

--

சென்னை: ஊரடங்கு காரணமாக மருத்துவ வசதிகள் அல்லது ஆலோசனையைப் பெற முடியாத மக்களுக்கு, ஆன்லைன் முறையில் சேவை வழங்கும் வகையில், டெலிமெடிசின் கிளினிக் ஏற்பாட்டில், நாடு முழுவதும் 180 மருத்துவர்கள் இதுவரை இணைந்துள்ளனர்.

இந்த ஏற்பாட்டின்படி, இதுவரை மொத்தம் 6000 நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில், ‍வெளிநாடுகளிலிருந்து அழைத்து மருத்துவ ஆலோசனை பெற்றவர்களும் உண்டு. இது இலவச மருத்துவ ஆலோசனை ஏற்பாடாகும்.

நோயாளிகளுக்கு பதிலளிக்க, 10 நிமிடங்கள் முதல் 3 மணிநேரங்கள் வரை எடுத்துக் கொள்கிறார்கள் மருத்துவர்கள்.

மருத்துவ ஆலோசனைப் பெறுவதற்கு, நோயாளிகளோ, அவர்களின் குடும்பத்தினரோ, 9840876460 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப் செய்தி அனுப்ப வேண்டும். அதன்பிறகு, நோயாளியின் பெயர், வயது, பாலினம், உடல்நல சிக்கல்கள், ஏற்கனவே இருக்கும் நோய்கள், தற்போது எடுத்துக்கொள்ளும் சிகிச்சை விபரங்கள் மற்றும் டெலிஹெல்த் கலந்துரையாடலுக்கான அனுமதி உள்ளிட்டவை குறித்த விபரங்கள் கேட்டு ஒரு SMS நோயாளிக்கு வந்து சேரும்.

உரை செய்தி அனுப்ப முடியாதவர்கள், வாய்ஸ் செய்தி அனுப்பலாம். நோயாளிகளின் தேவை குறித்த முக்கியத்துவம் மதிப்பிடப்பட்டு, அதன்பிறகு, மருத்துவர்களின் குழுவில் அது பகிரப்படும். அதன்பிறகு, குறிப்பிட்ட மருத்துவர், நோயாளியை தொடர்புகொள்வார்.